அசைக்க முடியாத மக்கள் சக்தி ஆகிறாரா ஸ்டாலின்?

தமிழக அரசியலில் காமராஜர்,  ஜெயலலிதா ஆகியோருக்கு நிகராக திமுக தலைவரும்,  தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசியலில் உயரத்தை தொட்டுவிட்டார் என்கின்றனர் தமிழக அரசியலை கூர்ந்து கவனிக்கும் அரசியல் திறனாய்வாளர்கள்.

தமிழக அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது 1977க்குப் பின்னர் எம்ஜிஆர் – கருணாநிதி,  1989க்கு பின்னர் கருணாநிதி – ஜெயலலிதா என இரு துருவ அரசியல் உருவானது.  ஆனால்,  1957 முதல் 1971 வரை அரசியல் களம் பலமுனை போட்டியாகவே இருந்தது.  அதில் யாரும் தொட முடியாத ஒற்றைத் தலைவராக காமராஜர் இருந்தார்.  அவருக்கு எதிராக ராஜாஜி,  அண்ணா, ராமசாமி படையாச்சி,  மாணிக்கவேல் நாயக்கர், சி.பா.ஆதித்தனார்,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,  சோசியலிஸ்ட்கள், இடதுசாரிகள் என பலமுனையாகவே அரசியல் களம் இருந்தது.

1957,  1962ம்  ஆண்டு நடைபெற்றத் தேர்தல்களில் காமராஜருக்கு போட்டியே இல்லாத சூழல் இருந்தது.  ஏனெனில் காமராஜர் தலைமையை காங்கிரஸ் கட்சியினர்  அப்படியே ஏற்றுக்கொண்டனர்.  1940ல் இருந்தே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காமராஜர் இருந்ததால் உட்கட்சிக்குள் யாருமே காமராஜருக்கு எதிராக முரண்டுபிடிக்கவில்லை.  அதுவும் ஒரு கட்டத்தில் காமராஜரின் ஆதரவாளர்கள் மட்டுமே கட்சியில் தொடர முடியும் என்ற சூழல் உருவானது.

இதனால்,  தேர்தல் அரசியலில் 1957, 1962 பேரவைத் தேர்தல்களில் காமராஜர் தலைமைக்கு 45 சதவீத வாக்குகள் கிடைத்தன.  அவருக்குப் போட்டியாக 1957ல் இரண்டாவது  இடத்தில் 15 சதவீத வாக்குகளுடன் திமுக இருந்தது.  1962 பேரவைத் தேர்தலில் 25 சதவீத வாக்குகளுடன் திமுக  இருந்தது.  ஆகையால் காமராஜருக்கு எதிராக அரசியல் களம் பலமுனையாகவே இருந்தது.

1967ல் கூட அண்ணாவை முன்னிறுத்தாமல்,  காமராஜருக்கு எதிராகவே,  எதிர்க்கட்சிகள்  ஒன்று திரண்டன.  அதன்பிறகு 1971ம் ஆண்டு தேர்தலிலும் காமராஜருக்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு அளித்தன.   அத்தேர்தலிலும் கருணாநிதியை முன்னிறுத்தவில்லை.

1977 தேர்தலில் அதிமுக உருவானதால் எம்ஜிஆர் – கருணாநிதி இடையிலான போட்டியாக இருந்தாலும்,  பிளவுபட்ட காங்கிரஸில் ஜி.கே.மூப்பனாரும் (17.5%),  ஜனதாவில் பா.ராமச்சந்திரனும் (16.5%) குறிப்பிடத்தக்க வாக்குகள் எடுத்து பலமுனை போட்டியாக களத்தை வைத்திருந்தனர். ஆனால்,  அதற்குப் பிறகு தமிழக அரசியல்  இரு துருவமாக மாறிவிட்டது.

அரசியலில்  இருந்து பா.ராமச்சந்திரன் ஒதுங்கியதால் எம்ஜிஆர் – கருணாநிதி இடையே மூப்பனார் ஒரு அரசியல் சக்தியாக மட்டுமே தொடர்ந்தார்.  1989 பேரவைத் தேர்தலில் மீண்டும் கருணாநிதி – ஜெயலலிதா என போட்டி உருவாகினாலும்,  மூப்பனார் (19.8 சதவீத வாக்குகள்),  ஜானகி ராமச்சந்திரன் என நான்கு முனை போட்டியாக தேர்தல் களம் மாறியது. 10 சதவீத வாக்குகளை பெற்றிருந்த ஜானகி,  அரசியல் களத்தில் இருந்து விலகியதால் 1991 முதல் கருணாநிதி – ஜெயலலிதா என இரு துருவ அரசியல் மீண்டும் துளிர்த்தது.

இருப்பினும் அரசியல் களத்தில் மூப்பனார் நிர்ணய சக்தியாகவே திகழ்ந்தார்.  மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு  இரு துருவ அரசியல் உச்சகட்டத்தை அடைந்தது.  இப்போது நடைபெற்ற 2021 பேரவைத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தாலும் அதிமுகவில்  இரட்டைத் தலைமையே தொடர்கிறது.

அதிமுக கொடுக்கும் இடங்களை பெற்றுக்கொள்ளும் நிலையில் தான்  பாமக,  பாஜக இருக்கின்றன. ஆனால், அன்புமணி என்னும் முதல்வர் வேட்பாளரை மீண்டும் முன்னிறுத்தும் அளவுக்கு பாமகவிடம் அரசியல் சக்தி இப்போதும் இருக்கிறது.  தனித்த கருத்தியல்,  மத்தியில்  ஆட்சி என்ற அதிகார பலம் ஆகியவற்றுடன் பாஜகவும் வலிமையாகவே இருக்கிறது.  இப்போதும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை வலிமை இழக்க செய்யும் வகையில் கே.அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவி, வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணித் தலைவி பதவி,  எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி என பாஜக தலைமை  வழங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி,  சி.வி.சண்முகம் ஆகியோர் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.  பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட,  அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளார்.  மேலும்,  திமுக விலகி இருந்தால்கூட அக்கட்சியுடன் தாங்களாகவே நெருக்கத்தை ஏற்படுத்த பாமக துடிப்பதாக தெரிகிறது.   இவ்வாறாக அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

ஆனால்,  திமுக கூட்டணி எவ்வித குழப்பம் இன்றி அப்படியே நீடிக்கிறது.  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்,  இடதுசாரிகள்,  மதிமுக,  விடுதலைச் சிறுத்தைகள்ஆகியவை திமுக கொடுக்கும் இடத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் இப்போதும் உள்ளனர்.  திமுகவில் காங்கிரசுக்கு 4.3 சதவீதம், மதிமுகவுக்கு 0.8 சதவீதம், விடுதலைச்சிறுத்தைகளுக்கு 0.7 சதவீதம்,  இடதுசாரிகளுக்கு தலா 0.5 சதவீதம் தான் தனிப்பட்ட முறையில் வாக்கு பலம் உள்ளது.  இதனால்,  36 சதவீத வாக்கு பலத்துடன் இருக்கும் திமுக தலைமையை எவ்வித முரணும் இன்றி கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன.

ஒரு காலகட்டத்தில் காமராஜரை உள்கட்சியினர், கூட்டணி கட்சியினர் எவ்வித முரணும் இன்றி ஏற்றுக்கொண்டார்களோ அதேபோல ஸ்டாலினையும்,  உள்கட்சியினர்,  கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொண்டு விட்டனர்.  இந்த அடிப்படையில் தான் காமராஜரின் உயரத்துக்கு வந்துள்ளார் ஸ்டாலின்.

அதேபோல நடந்து முடிந்த பேரவைத் தேர்தல்களை,  மக்களவைத் தொகுதியாக மாற்றிப் பார்த்தால் 31 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.  இதன் விளைவாகவே பிரதமர் நரேந்திர மோடி,  சோனியா காந்தி,  இடதுசாரிகள் ஆகியோர் ஸ்டாலினை விரும்புகின்றனர்.  அதேவேளையில் தில்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அளவுக்கு செல்வாக்கு இருப்பதாக தெரியவில்லை.

அடுத்து வரும் பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வது குதிரைக் கொம்பாகவே மாறலாம்.  கட்சிக்குள் இருந்து கொண்டு பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருக்கிறார். அதேபோல,  கட்சிக்கு வெளியில் இருந்து சசிகலாவும் எடப்பாடிக்கு பெரும் முட்டுக்கட்டையாக  இருக்கிறார்.

இதற்கு முன், கட்சியை கைப்பற்றி அரசியல் செய்யும் எண்ணத்தில், இரண்டாம் கட்ட தலைவர்களின் விருப்பு வெறுப்புகளை சமாளித்து  அரசியல் செய்து வந்தார் கலைஞர் கருணாநிதி.  ஆனால்,  திமுக தலைவர் ஸ்டாலினோ,  மக்கள் சக்தியாக உருவெடுத்து  வளர்ந்து கொண்டிருக்கிறார்.  கருணாநிதியைப் போலவே,   எடப்பாடி பழனிசாமியும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  ஆனால் ஸ்டாலின் அப்படியல்ல, ஜெயலலிதாவைப் போல தன் விருப்பத்துக்கு ஏற்றார்போல  கட்சி நிர்வாகிகளை பதவியில் அமர்த்துவது,  அமைச்சரவையை உருவாக்குவது  போன்றவற்றைச்  செய்து வருகிறார்.  காமராஜர்,  ஜெயலலிதா  ஆகியோரைப் போல கட்சியிலும், ஆட்சியிலும் தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வலிமையான  ஒற்றைத் தலைமையாக ஸ்டாலின்  உருவெடுத்துவிட்டார்.

எதிர்வரும் பேரவைத் தேர்தலிலும் இதே நிலை தான் தொடரப் போகிறது.  அவ்வாறு தொடர்ந்தால் அது காமராஜருக்கு எதிராக பலமுனையாக அரசியல் களம் இருந்ததுபோல,  2026 பேரவைத் தேர்தலிலும் ஸ்டாலினுக்கு எதிராகவே அரசியல் களம் பலமுனை போட்டியாக மாறும்.  இரு துருவ அரசியல் தமிழகத்தில் மறையத் தொடங்கியதால் ஸ்டாலினுக்கு போட்டியாக தலைவர்களே இல்லை என்ற சூழ்நிலை மெல்ல மெல்ல கனிந்து வருகிறது.

இதனால் தான் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம் (ஈரோடு),  பெ.பழனியப்பன் (தருமபுரி),  வ.து.நடராஜன் (ராமநாதபுரம்),  முன்னாள் அதிமுக மாவட்டச் செயலர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி (ஈரோடு), முன்னாள் எம்.பி.க்கள் கோவிந்தராஜன் (ஈரோடு), பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்),   மக்கள் நீதி மய்ய முன்னாள் துணைத் தலைவர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். அரசியல் களத்தில் ஸ்டாலின் உயரம்  அதிகரித்ததால் தான்  மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவை நோக்கி முக்கிய நிர்வாகிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மக்களவைத் தேர்தல் வரை மட்டுமன்றி,  அடுத்த பேரவைத் தேர்தல் வரையும் இந்த கட்சி தாவும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்கும்  என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

 

 மத்தியிலும், மாநிலத்திலும் பெரும் செல்வாக்கு

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் ஸ்டாலின் ஒற்றைத் தலைமையாக வலுவாக இருக்கிறார் மறுபக்கம் அதிமுகவில் இரட்டைத் தலைமை நிலவி வருகிறது. மேலும் திமுகவின்  கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலின் தலைமையை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். டெல்லியில் காங்கிரஸ் உடனான கூட்டணியை ஸ்டாலின் முறித்துக் கொண்டால் அதுவே போதும் எனும் எண்ணத்தில் மோடி உள்ளார். அதேவேளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ ஸ்டாலின் கொடுக்கும் சீட்டுகளை பெற்றுக் கொண்டால் போதும் எனும் எண்ணத்தில் உள்ளார்.

இவ்வாறாக ஸ்டாலினுக்கு மாநில அரசியலிலும் மத்திய அரசியலிலும் பெரும் செல்வாக்கு இருக்கிறது.  காரணம் தேசிய அளவில் காங்கிரஸ் 2014ம் ஆண்டு பெற்றதை விட 2019ம் ஆண்டு 9 எம்பிக்களை கூடுதலாகப் பெற்றதற்கு ஒரே காரணம் ஸ்டாலின் அளித்த கூட்டணி வாய்ப்பு தான். அதேபோல 2024 ம் ஆண்டு ஒருவேளை மோடிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இந்திரா காந்திக்கு கருணாநிதி ஆதரவு அளித்ததை‌ப் போல ஸ்டாலின் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் எனும் எண்ணமும் மோடிக்கு உள்ளது.

மூன்றாவது அணி கட்சிகளான மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், சரத் பவார் போன்றவர்களுக்கு ஸ்டாலின் ஆதரவில் தங்களால் பிரதமர் ஆக முடியாதா எனும் எண்ணம் உள்ளது. இவ்வாறாக ஸ்டாலினுக்கு பல தரப்பில் இருந்தும் அழைப்புகள் வந்தாலும் சிறுபான்மை வாக்குகளுக்காக ஸ்டாலின் காங்கிரஸ் உடனான கூட்டணியைத் தொடர விரும்புகிறார்.