தமிழகத்திலேயே முதன்முறையாக ரத்தக் குறைபாடு உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஹீமோபிலியா சொசைட்டி கோயம்புத்தூர் கிளையும்  இணைந்து தமிழகத்திலேயே முதன்முறையாக இன்று(23.7.2021) ஹீமோபீலியா எனும் ரத்தக் குறைபாடு உள்ள நபர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ஹீமோபீலியா சிகிச்சை மையத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது.

இந்நிகழ்ச்சியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.நிர்மலா துவக்கிவைத்தார். இவ்விழாவில்  அரசு மருத்துவமனை ஹீமோபீலியா நோடல் அதிகாரிகள் டாக்டர்.மங்கையற்கரசி, கீதாஞ்சலி மற்றும் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் பூமா, சமூக சேவகர் நிகில் மற்றும் ஹீமோபீலியா சொசைட்டி கோயம்புத்தூர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஹீமோபிலியா என்னும் ரத்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 350 பேர் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 250 பேர் உள்ளனர், ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொழுது ரத்த கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ரத்தக் கசிவினை தவிர்க்க அவர்களது உடல்நிலைக்கு ஏற்ற ஃபெக்டர்  (factor) 8 & 9 செலுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. அதன் பின் இவர்களுக்கு சிறப்புமுகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மருத்துவமனையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 50 பயனாளிகள் மற்றும் அவர்களது 50 கவனிப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.