ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பழங்குடியின மக்கள்

கோவை ஆனைகட்டி அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பழங்குடியின கிராமங்களில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்தநிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறையினர் பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஆனைக்கட்டி ஆரம்ப சுகாதார நிலைய எல்லையில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அஜய் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதன் விளைவாக ஒவ்வொரு கிராமங்களில் விழிப்புணர்வு அடைந்த 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு அடைந்த கிராமவாசிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நேற்று மட்டும் வடக்கலூர் பழங்குடியினர் கிராமவாசிகள் 100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் முதல் முதியோர் வரை ஆர்வமுடன் அச்சமின்றி தடுப்பூசிகள் செலுத்தி கொண்டனர்.