மீண்டும் களமிறங்க துடிக்கும் டிக் டாக்!

சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் எனக் கூறி பப்ஜி, ஷேர் சாட், இஎஸ் பைப் எக்ஸ்ப்லோரர் உள்ளிட்ட 59 செயலிகள் நீக்கப்பட்டன. சற்று தாமதிக்கப்பட்ட நிலையில் டிக் டாக்கும் அதிரடியாக நீக்கப்பட்டது.

திடீரென தடை செய்யப்பட்டதால் நிறுவனத்திற்கு பெரிய அடி என்றாலும், டிக் டாக் ரசிகர்கள் என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு சென்றுவிட்டார்கள். டிக் டாக்குக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்த நிலையில் அவர்களெல்லாம் தவித்தார்கள். டிக் டாக் இடத்தை நிரப்ப இன்ஸ்டா ரீல்ஸ் கொண்டு வந்தது. இன்னும் சில ஆப்களும் களம் கண்டன. ஆனால் டிக் டாக்கின்  இடம் இதுவரை காலியாகவே உள்ளது. இந்த நிலையில் டிக் டாக் ரசிகர்களுக்காகவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டிக் டாக் மீண்டும் இந்தியாவுக்குள் வரவுள்ளதாம். பப்ஜி செய்த அதே ஸ்டண்டை கையில் எடுக்கும் TikTok, செயலியின் பெயரை TickTock என்று மாற்றி களத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் அதற்கான வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. செயலியின் காப்புரிமை தொடர்பான ஆவணங்களை சமர்பித்து இருக்கும் அந்நிறுவனம், பெயரை  TickTock எனக் குறிப்பிட்டும், இந்தியாவின் ஐடி விதிகளை பின்பற்றுவோம் என உறுதி அளித்தும் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. ஒரு படி மேலே போய், வேண்டுமெனால் ஐடி விதியின்படி குறைதீர்க்கும் அதிகாரி ஒருவரையும் நியமிப்போம் எனவும் கூறியுள்ளதாம் பைட்டான்ஸ். உறுதியாக முயற்சிகளை எடுத்து வருவதால் விரைவில் இந்தியாவில் வேறு பெயருடன் டிக் டாக்  களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தி இந்தியாவுக்கான சிறப்பு உருவாக்கமாக புதிய டிக் டாக் இருக்குமென கூறப்படுகிறது. இந்த செய்தியால் டிக் டாக் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர்.