கிணற்று நீரில் நீந்திய படியே யோகா செய்யும் சிறுமி

கோவை சூலூர் அருகே 7 வயது சிறுமி ஒருவர் கிணற்று நீரில் மிதந்தபடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக யோகா செய்து அசத்தி வருகிறார்.

சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வரும் காளியப்பன் என்பவரது மகள் சுகந்தி, இவரது 7 வயது மகள் தியாமிகாசாய் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

தியாமிகசாய் தாத்தா காளியப்பனின் உதவியுடன் சிறுவயது முதல் தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழகி உள்ளார். தந்தை பூவராகவன் மற்றும் தாய் சுகந்தியின் ஊக்கத்தால் யோகாசனங்கள் செய்ய கற்றுக்கொண்ட சிறுமி, அதனை கிணற்றில் நீந்தியபடி செய்து பார்த்துள்ளார்.

தொடர்ந்து கிணற்று நீரில் மிதந்தபடி யோகாக்களை பழகிய சிறுமி, தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் பத்மாசனம் செய்து அசத்தி வருகிறார். இதுகுறித்து சிறுமி தியாமிகசாய் கூறுகையில், கிணற்றில் தனது தாத்தா கற்றுக்கொடுத்த நீச்சல் மூலம் யோகாசனங்களை செய்து வருவதாகவும், தற்போது 4 வகையான ஆசனங்களை கிணற்றில் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.