ஆதாரில் மொபைல் எண்ணை சேர்க்க இனி அலைய வேண்டாம் : புதிய திட்டம் அறிமுகம்

உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்கவும், மாற்றவும் இனி அங்குமிங்கும் அலைய வேண்டாம். உங்கள் வீடு தேடி வந்து சேவை செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட்ஸ் பேமென்ட் பேங் (IPPB) மற்றும் யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) இணைந்து இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இதன்படி உங்கள் பகுதி போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம். இதற்காக 650 இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிகள் ஒரு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1.46 லட்சம் தபால் ஊழியர்களும் கிராமின் தக் சேவகர்களும் பணியில் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) சிஇஓ சவரவ் கார்க், “ஆதார் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எளிமையாக்கும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு படிநிலை தான் வீடு தேடி சென்று சேவைகளை வழங்குவது. இந்தியா போஸ்ட்ஸ் பேமென்ட் பேங் (IPPB) உதவியுடன் தபால் ஊழியர்களும் கிராமின் தக் சேவகர்களும் ஆதார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தங்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணைச் சேர்த்துவிட்டால் மக்கள் பல்வேறு அரசாங்கத் திட்டத்தின் நலன்களை போன் வாயிலாகவே அனுபவிக்கலாம்” என்று கூறினார்.

இதேபோல், இந்தியா போஸ்ட்ஸ் பேமென்ட் பேங் (IPPB) தலைமை செயல் அதிகாரி ஜே.வெங்கட்ராமு கூறும்போது, “ஆதார் மொபைல் எண் பணியை தபால் அலுலகங்கள் மூலம் தபால்காரர்கள், கிராமின் தக் சேவகர்கள் செய்வார்கள். டிஜிட்டல் சேவை வசதி ரீதியாக எந்த ஒரு பகுதியும் பின் தங்கியிருக்கக் கூடாது என்பதில் இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

இப்போதைக்கு ஐபிபிபி மொபைல் எண்களை அப்டேட் செய்யும் சேவையை மட்டும் மேற்கொள்ளும், விரைவில் குழந்தைகளின் பெயர் இணைப்பு போன்ற வேலைகளும் மேற்கொள்ளப்படும். மார்ச் 31.2021ன் படி இந்தியா முழுவதும், 128.99 கோடி பேருக்கு யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணையவழியிலும் இணைக்கும் வசதி இருக்கிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:

உங்கள் தொலைதொடர்பு ஆபரேட்டரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

அதில், இணைக்கப்பட வேண்டிய உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும்.

ஓடிபியை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

அப்போது உங்கள் திரையில், ஒப்புதல் செய்தி காண்பிக்கப்படும்.

அதில் நீங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

மீண்டும், உங்கள் தொலைதொடர்பு ஆபரேட்டரிடமிருந்து மீண்டும் ஒரு ஓடிபி வரும்.

எல்லா விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்று அந்த OTP ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தினால் உங்கள் ஆதாருடன் உங்களின் மொபைல் எண் இணைக்கப்பெறும்.