பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராமின் கதாபாத்திரம்?

புகழ் பெற்ற சோழ மன்னரான ராஜராஜ சோழனின் வாழ்க்கையை பல சுவாரசிய நிகழ்வுகளோடு கலந்து சற்று கற்பனை திறனோடு, எழுத்தாளர் கல்கியால் எழுதப்பட்ட நாவல் தான் பொன்னியின் செல்வன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்து இன்றளவும் வாசகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இந்த நாவலை தழுவி பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர் . மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராமின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி ஆழ்வார்க்கடியான் என்ற வைணவ சாமியாரின் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து வருகிறாராம். மேலும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ஜெயராம் மொட்டை அடித்துள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் நாவலில் மொட்டை அடித்து வரும் கதாபாத்திரம் ஆழ்வார்க்கடியான் ஒன்று மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.