ஆப்கானிஸ்தானின் கந்தகார் மோதல் : புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் நூற்றுக்கணக்கான சடலங்களை பொது வெளியில் எரிந்து கொண்டிருக்கும் கோர  நிகழ்வை ஒரே ஒரு புகைப்படம் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் ராய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்.

இந்நிலையில்தான், உலக நாடுகளை போலவே இந்தியாவிலும் கொரோனாவால் பிணங்கள் குவிந்து அதை எரியூட்ட ஏற்பட்ட சவால் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், அந்த புகைப்படத்தை மேற்கோள்காட்டி கொரோனா இறப்புகளை குறித்த செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவர தொடங்கின. இந்நிலையில், பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கந்தகாரில் நடந்து வரும் மோதலை படம் பிடிக்க சென்றபோது கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலை படம் பிடிக்க சென்ற டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட செய்தியை ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ”டோலோ நியூஸ்” ட்வீட் செய்துள்ளது.

பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கடந்த சில நாட்களாக கந்தகாரில் நடந்து வரும் மோதலை படம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், ஜூலை 15ம் தேதி இரவு நடந்த மோதல்களின் போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு கந்தகார் தாக்குதலில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக கூறி தலிபான் தாக்கிய காட்சிகளையும் டேனிஷ் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், தான் வந்த கான்வாயை குறைந்தது 3 ஆர்பிஜி குண்டுகள் தாக்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து உயிர் பிழைத்ததாகவும்’ அதில் குறிப்பிட்டிருந்தார்.