உலக சாதனை படைத்தது துபாய் : 200 அடி ஆழமான நீச்சல் குளம்

உலகத்தில் பல முக்கியமான கட்டிடங்களை கொண்டுள்ள நாடு துபாய். உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மாலும், உயரமான கட்டிடம் அங்கு உள்ளது. அந்தவகையில் தற்போது புதிதாக உலகத்தின் ஆழமான நீச்சல் குளம் தற்போது அங்கு இடம்பெற்றுள்ளது.

இந்த நீச்சல் குளம் சுமார் 196 அடியில், அதாவது 60 மீட்டர் ஆழமாக உள்ளது. இதில் 14 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீர் உள்ளது. மேலும் உலகத்தில் உள்ள மற்ற டைவிங் குளங்களைவிட நான்கு மடங்கு அளவுக்கு, இந்த குளம் ஆழமானது. அத்துடன் அதில் இருக்கும் நீரின் வெப்பம் 30 டிகிரி செல்சியசாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்விம்சூட் அணிந்து சற்று சிரமம் இல்லாமல் மக்கள் டைவிங் செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

இந்த நீச்சல் குளம் உலகிலேயே டைவிங் செய்ய மிகவும் ஆழமான குளம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை கடந்த மாதம் 27-ஆம் தேதி அதிகாரிகள் அளித்தனர். இந்தச் சூழலில் இந்த நீச்சல் குளமான வீடியோ ஒன்றை அந்நாட்டின் இளவரசர் ஷேக் ஹமதான் பின் முகமது அல் ரஷீத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உலகமே உன்னை எதிர்நோக்கி உள்ளது” எனக் கூறி டீப்டைவ் துபாய் தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரும் காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் அந்த அழத்தில் ஒரு நட்சத்திர விடுதி போல் அனைத்து வசதிகளும் அதற்குள் உள்ளன. இந்த வீடியோவை பலரும் பார்த்து வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக போலாந்து நாட்டில் டீப் ஸ்பாட் என்ற டைவிங் குளம் 45 மீட்டர் ஆழத்தில் இருந்தது. அதுவே தற்போது வரை கின்னஸ் உலக சாதனையாக இருந்த நிலையில் அதை டீப்டைவ் துபாய் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குளம் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.