அனுபவமும் இளமையும் சேர்ந்து கூட்டாக செயல்படுவோம் –  அண்ணாமலை

பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்க அண்ணாமலை கோவையில் இருந்து யாத்திரையாக புறப்பட்டார். அவருக்கு பா.ஜ.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன் தனது ஐபிஎஸ் பதவியைத் துறந்து விட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவருக்கு துணைத்தலைவர் பதவியில் இருந்து குறுகிய நாட்களிலேயே மாநில தலைவர் என்ற பதவியை அடைந்துள்ளார். வரும் 16ம் தேதி அவர் சென்னையில் பொறுப்பேற்க உள்ளார். இதற்காக இரண்டு நாள் பயணமாக கோவையிலிருந்து யாத்திரையாக சென்னை செல்கிறார்.

கோவையில் வ.உ.சி மைதானத்தில் குவிந்த பாரதிய ஜனதா கட்சியினர் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து அவரை வழியனுப்பி வைத்தனர். முன்னதாக கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை அங்கிருந்து வ.உ.சி மைதானம் வந்து தொண்டர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவையில் இருந்து முதலில் கரூர் செல்லும் அன்ண்ணாமலை, நாளை சென்னை செல்கிறார். அவர் செல்லும் வழியெல்லாம் பல இடங்களில் மலர் தூவி வரவேற்பு அளிக்க பா.ஜ.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பொறுப்பேற்க உள்ளோம். இதனால் இன்று கோயம்புத்தூரிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல இருக்கிறோம். போகின்ற வழியில் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து கொண்டு செல்கிறோம். கொரோனா காலம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு சென்னையில் பொறுப்பேற்க இருக்கின்றோம்.

தமிழக பாஜக விற்கு சிறப்பாக செயல்படுவேன் என்ற  நம்பிக்கை உள்ளது. பாஜகவை பொருத்தவரை மற்ற கட்சிகளை போன்று தனிமனித கட்சி அல்ல. நமது கட்சியில் ஒரு பக்கம் அனுபவம் இருக்கிறது. ஒரு பக்கம் இளமை இருக்கிறது. இரண்டும் சேர்த்து கூட்டாக  செயல்படுவோம் என்றார்.