அரிய வகை இதய நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்திய கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை

அரிய இருதய நோயால் பாதிப்படைந்த 70 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை அல்லாமல் ஏஎஸ்டி கருவியை கொண்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.

குறைந்த ரத்த அழுத்தத்துடன் கூடிய தீவிர மாரடைப்புடன் கே.எம்.சி. ஹெச் மருத்துவமனையில் 70 வயதான பெண்மணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு அரிய வகையான இதயத்தின் பக்கவாட்டில் உள்ள தசையில் சிதைவு உள்ள இருதய நோய் இருப்பதை மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சிதைவு இருதயத்தின் உட்பகுதியில் ஏற்பட்டதால், வெளிப்பகுதியில் உள்ள மெல்லிய தோல் ரத்தக்கசிவு வெளியே ஏற்படாமல்  இருக்க உதவியது. உடனடியாக அந்த பெண்மணிக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆனால் அவருக்கு கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் பருமன் மற்றும் பலவீனமான இருதய நாளங்களை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ள உகந்தவர் அல்ல என்று கண்டறியப்பட்டது. அந்த பெண்மணியும் அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை மேற்கொள்ளவும் தயாராக இல்லை.

அந்த பெண்மணிக்கு அறுவை சிகிச்சை முறையை தவிர்த்து புதிய சிகிச்சை முறையை நவீன தொழில்நுட்பத்துடன் சிகிச்சை அளிக்க அந்த பெண்மணியின் உறவினர்களிடம், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் இருதயவியல் துறை (Structural heart team) வல்லுநர்களான டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர், டாக்டர் பாலகுமாரன், டாக்டர் பிரசாந்த் வைஜயநாத், டாக்டர் கண்ணன் மற்றும் டாக்டர் காப்பியன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இறுதியில், இருதயத்தில் உள்ள துளைகளை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொத்தான் போன்ற கருவியை பயன்படுத்தி சிதைவை மூடும் முயற்சியை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் இதுபோன்ற கருவிகளை கொண்டு ஒரு பெரிய சிதைவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

இந்த நோயாளிக்கு இந்த சிகிச்சை வழங்குவதில் பல சவால்கள் இருந்தன. குறிப்பாக துளை மிகப் பெரியதாக இருந்தது. திசு மென்மையாகவும், சில பகுதிகள் செயலற்றும் இருந்தது. எனவே கூடுதலாக பெரிய ASD கருவி பயன்படுத்தி பிளவு முழுவதையும் வெற்றிகரமாக சரிசெய்து, நோயாளியை மருத்துவமனையில் இருந்து மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. இது போன்ற பெரிய துளையை 40mm ASD கருவி கொண்டு சிகிச்சை அளித்தது இதுவே முதன் முறையாகும்.

இதுகுறித்து கே.எம்.சி. ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி அவர்கள் கூறுகையில்: “இந்த நோயாளியின் நிலையறிந்து அவருக்கு தகுந்த சிகிச்சையினை வழங்கிய மருத்துவ குழுவினருக்கு என் பாராட்டுகள். திறமை மிக்க மருத்துவ வல்லுநர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகள், தரமான உட்கட்டமைப்புடன் செயலாற்றி வருவதால் எங்களால் மிக சவாலான தருணங்களிலும் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கிட முடிகிறது” என்றார்.