முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம்

கொரோனா கால நேரத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மேடை கலைஞர்களுக்கு கோவை டவுன்ஹால் மைக்கேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் அனைத்து சேவைகளும் முடங்கின. பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், விழாக்கள் மேடை நிகழ்ச்சிகள் இல்லாததால் மேடை கலைஞர்களும் போதிய வருமானமில்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து மேடை கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர். கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதில், பள்ளியின் முதல்வர் பங்குதந்தை ஆண்ட்ரூ கலந்து கொண்டு மேடை கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை மைக்கேல்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அக்கீம், ஜெரால்ட், ஸ்டீபன், வர்கீஸ், செய்யது அபுதாகிர், முரளி, தியாகு, கிஷோர், மிராஜ் உட்பட பல்வேறு மாணவர்கள் செய்திருந்தனர்.