ஒளியும் ஒலியும் ரசிக்கும் ரசிகர்கள் நாம்

கடந்த 100 ஆண்டுகளில் தான் இந்தியாவின் மிக பெரிய வளர்ச்சி நடைபெற்றுள்ளது. சுதந்தரம் பெரும் முன் நம் நாட்டின் அதிகபட்ச தொழில்நுட்ப வளர்ச்சி என்று கருதப்பட்டது. ரயில் மற்றும் ரேடியோ மட்டும் தான். வேறு இருந்திருக்கலாம். இந்த ரேடியோ மற்றும் ரயில் தற்பொழுது அதாவது 2021 ஆம் ஆண்டு ரயில் மெட்ரோவாக உருமாறியுள்ளது. அதிவேக பயணம், அதற்கேற்ப கட்டணம், புது வித கட்டிட வடிவமைப்பு, வெளிநாடு போன்ற தோற்றம் என இதன் வளர்ச்சி பெரிதளவு தெரிகிறது.

ரேடியோ 100 ஆண்டுகளுக்கு முன்பு தேநீர் கடைகளிலும், ஒரு சில பணக்காரர் வீடுகளிலும் மட்டுமே இருந்தது. தற்பொழுது இந்த ரேடியோ எனும் ஊடக கருவி உருமாறி 2021 ஆம் ஆண்டில் அனைவரின் சட்டை பையிலும் உலகத்தையே அடக்கி கொடுத்துவிட்டது. காரணம் வெறும் செய்திகள் மற்றும் பாட்டு கேட்பதற்காக மட்டும் ஒலி வடிவில் இருந்த இது தற்பொழுது ஒளி ஒலி வடிவில் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

வெறும் ரேடியோவாக தெருவில் ஒலித்து கொண்டிருந்த ஊடகம், ரேடியோ கருப்பு வெள்ளை தொலைக்காட்சியாக மாறிய பொழுது வெறும் டிவியை பார்க்க தனி கூட்டம் வந்தது என்பது உண்மை தான். கருப்பு வெள்ளை கலராக மாறிய பொழுது சினிமா மீதான மோகம் அதிகமானது. கிராமங்களில் பண்ணையார் வீட்டில் கலர் டிவி மாட்டும் பொழுது அதற்கான குச்சி குச்சியாக நீண்டு இருக்கும் ஆண்டனாவை மாட்டும் பொழுது மேலே நின்று தெரியுதா என ஒருவர் கேட்க கீழிருந்து பலர் தெரியல என்ற என்று கூறுவார்கள். இதுவே அப்பொழுது வந்த வண்ண தொலைக்காட்சி கொடுத்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தது.

சினிமாக்களும் பொதுஜனங்களின் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுகொண்டிருந்தது. காரணம் ஊருக்கு ஒரே ஒரு திரையரங்கு இருக்கும். அதனால் நல்ல படங்கள் அனைத்து வெள்ளி விழா, பொன்விழா நாட்களை கடந்து வெற்றி பெரும். சில நல்ல படங்களை திரும்ப திரும்ப பார்க்கும் ஆட்களும் இருந்தனர்.

இந்த தொலைக்காட்சியில் தமிழுக்கென்று தனி சேனல் இல்லாத நிலையில் வெள்ளிக்கிழமை தூர்தர்சனில் வெள்ளிக்கிழமை மாலை ஒளிபரப்பப்படும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சியை பார்க்காதவர் இருந்திருக்கவே மாட்டார்கள். நாளடைவில் தமிழ் சேனல்கள் உருவாக்கி அதில் நெடுந்தொடர்கள் உருவாகின. அதனை வீட்டு பெண்கள் பெரிதும் தொடர்ந்து பார்த்து வந்தனர். அந்த தொலைக்காட்சி பேட்டி கொஞ்சம் கொஞ்சமாக  உருவ அளவு குறைந்து அகலம் அதிகரித்து வீட்டிலேயே சின்ன திரையரங்கை பார்ப்பது போன்ற அளவில் தொலைக்காட்சி பெட்டிகள் வளர்ந்து வந்தது. அதற்கேற்ப சினிமாவும் தொழிநுட்ப அளவில் வளர்ச்சி பெற்று வந்தது.

அதற்கடுத்த படியாக வெறும் உள்ளங்கையளவு இருந்த கைபேசிகள் பட்டன் இல்லாமல் தொடுதிரை மூலம் இயங்கும் செல்போன்கள் ஸ்மார்ட் போன் என்ற பெயரில் வந்தது. இதில் இணைய வளர்ச்சியாக வெறும் 2ஜி நெட்ஒர்க் பயன்பாட்டில் மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா பயன்படுத்துவது அளவிற்கு அதிகமானது என்று எண்ணிய நிலை மிக குறைந்த கால அளவில் ஒரு நாளைக்கு ஒரு 1ஜிபி டேட்டா போதாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.

சினிமா என்பது திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்ற நிலை மாறி ஓடிடி எனப்படும் இணைய வழியில் வெளியாக ஆரம்பித்தது. இந்த வளர்ச்சி வெறும் ஒரே ஆண்டில் பெரிதளவில் உருவாகிவிட்டது. இதில் கொரோனாவின் பங்குமிக பெரியது. கொரோனா நோய் தோற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்டில் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் முடங்கி போனது. மாதக்கணக்கில் வீட்டிலேயே இருந்த மக்கள் பொழுது போக்கை பெரிதும் நாடினார்கள். அதன் விளைவு தான் ஓடிடி வளர்ச்சி. ஏற்கனவே இது இருந்தாலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதன் வளர்ச்சி அசுர வேகம் எடுத்து.

இதையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஏலே, மண்டேலா போன்ற தமிழ் படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதற்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்ததால் தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, நகைச்சுவை நடிகர் ஜோகிபாபு இணைத்து நடிக்கும் வெள்ளையானை திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இது கலைத் துறையின் வளர்ச்சி என்பதா? இல்லை திரையரங்கு வெளியீடு எனும் பெரும் கொண்டாட்டத்தை நான்கு சுவருக்குள் அடக்கும் விதமாக அமைந்து விடுகிறதா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  இது எத்தகைய வளர்ச்சியை பெற்றாலும் ஒளியும் ஒலியும் ரசிக்கும் ரசிகர்களாக நாம் என்றும் இருப்போம்.