பன்முக நோக்கில் தமிழியல் பரிமாணங்கள் – கருத்தரங்கம்

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, புதன்கிழமை (1.7.2021) அன்று நடத்திய இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் ‘பன்முக நோக்கில் தமிழியல் பரிமாணங்கள்’ எனும் பொருண்மையில் ஏழு நாள் கருத்தரங்கம் தமிழ் மொழி வகைப்பாடுகளை எடுத்துணர்த்தும் விதமாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நடைபெற்றது.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க தொடக்க விழாவிற்கு தமிழ்த்துறைத் தலைவர் ப.முத்துக்குமாரவடிவேல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், பதிவாளர் சின்னப்பன் முன்னிலையுரை வழங்கினார்.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தலைமையுரை வழங்கினார். கே.பி.ஆர் கலைக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மகிழ்வுரை வழங்கினார்.

முதல் நாள் நிகழ்வில் “சட்டத்தமிழ்” எனும் தலைப்பில், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மேனாள் பதிவாளர் முத்துவேலு அவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் “மருத்துவத்தமிழ்” எனும் தலைப்பில், கோயம்புத்தூர் பூ.சா.கோ. மருத்துவக்கல்லூரி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பெ.இரா.முருகேசன் அவர்களும், மூன்றாம் நாள் நிகழ்வில் ”மலேசிய பேச்சுத்தமிழ்” எனும் தலைப்பில் மலேசியா, மலாயா பல்கலைக்கழகம், மொழியியல் துறை, விரிவுரையாளர் மலர்விழி சின்னையா , நான்காம் நாள் நிகழ்வில் “திரையில் மலர்ந்த தீந்தமிழ்” எனும் தலைப்பில் மேனாள் தமிழ்மொழிக் கல்வித்துறை இயக்குநர், மெல்பர்ன், ஆஸ்திரேலியா ஜெயராம ஐயர் மகாதேவ சர்மா, ஐந்தாம் நாள் நிகழ்வில் “ஊடகத்தமிழ்” எனும் தலைப்பில் இலங்கை ஊடாவியலாளர், மதனவாசன் , ஆறாம் நாள் நிகழ்வில் “இணையத்தமிழ்” எனும் தலைப்பில் இணையத்தமிழ் ஆய்வாளர் மற்றும், திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் துரை.மணிகண்டன், ஏழாம் நாள் நிகழ்வில் “தொழில் நுட்ப உலகமும் தமிழ்க் கல்வியும்” எனும் தலைப்பில் சுவீடன், சால்மாஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர், விஜய் அசோகன் சிறப்புரை வழங்கினார்கள்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பெ.காளிராஜ் நிறைவுப்பேருரை வழங்கி சிறப்பித்தார். பங்கேற்பாளர்கள் ZOOM தளத்திலும் வலையொளி தளத்திலுமாக 2100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.