சினிமா தனது இயல்பை இழந்து விடுமா?

சினிமா ஒன்றில் தான் தற்பொழுது கருத்து சுதந்திரம் என்பது பெயரவில் இருந்து வருகிறது. அதனையும் தடுக்கும் விதமாக தற்பொழுது கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021திரை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரின் மத்தியிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, புதிய டிஜிட்டல் கொள்கை ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவின் மூலம் சினிமாவை அரசு தன் இரும்புக்கரங்களால் ஒடுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் அரசியல் தலையீடுகளும் அரசின் தலையீடுகளும் அதிகரித்திருக்கின்றன. ஒரு வரலாற்று நிகழ்வு, தனிப்பட்ட ஒருவர் அல்லது ஓர் இயக்கத்தின் வரலாறு, மதம் தொடர்பான நம்பிக்கைகளின் மீதான விமர்சனங்கள் போன்ற உணர்ச்சி மிக்க விஷயங்கள் குறித்துப் படங்கள் எடுக்கப்படும்போது அவை விவாதத்துக்கு உள்ளாகின்றன. படம் வெளிவரும் முன்னரே அது சம்பந்தப்பட்ட குழுக்களுக்கும், இயக்கங்களுக்கும் திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போக்கும், வெறும் டிரெய்லரை மட்டுமே பார்த்துவிட்டுப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோஷமும் தற்போது அதிகரித்திருக்கின்றன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்துக்கு (1952) சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே சென்சார் அனுமதி பெற்றுவிட்ட படத்தின் சான்றிதழில் மாற்றங்கள் செய்ய முடியும். தேவைப்பட்டால் அந்தச் சான்றிதழையே ரத்து செய்யவும் முடியும். இது ஒரு புறம் இருக்க திருட்டு தனாமாக படங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் சினிமாவின் சுதந்திரத்தை பரிக்கும் விதமாக உள்ளது என்று திரைபிரபலங்கள் நடிகர் கமல், சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் போன்றோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சமீக காலமாக வெளிவரக்கூடிய சில படங்களுக்கு அரசியல் ரீதியிலான தாக்குதல் இருந்துவருகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை பெரிய அளவில் இல்லை என்று தோன்றுகிறது. இது கலைத்துறை கட்டிபோடும் செயலாக உள்ளது என்பது சமூகத்தில் ஒருவனாக எனது கருத்து. இந்த சட்டத்தால் சினிமா தனது இயல்பை இழந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது.

தகவல் : விகடன்