ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கு உதயநிதி எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021-க்கு, நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021-ன் படி, ஒருமுறை தணிக்கைக்கு உள்ளான படத்தை மீண்டும் தணிக்கை செய்ய முடியும். இது, படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறி விடும் என, திரைத்துறையினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஷால், இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

‘ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021’ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். என பதிவிட்டுள்ளார்