கோயில் கடைகளில் தீத்தடுப்பு சாதனங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் கடந்த பிப்.2 ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர்  மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து போயின. இதில் கோயில் மண்டபங்களும் சேதமாயின. இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நீதிமன்றம் உடனடியாக கடைகளை காலி செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன.

மேலும், கோயில்களில் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வளாகங்களிலும் உள்ள கடைகளை காலி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுமார் 27 கடைகள் உள்ளன. அங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அணைக்கும் விதத்தில் அனைத்து கடைகளிலும் கடைக்கு ஒன்று வீதம் 27 கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு சாதனம் வாங்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் வளாகத்தில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து அனைவரின் மனதையும் மிகவும் பாதித்துள்ளது. மேலும், இந்த கடைகளை வைத்துதான் பல குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு சில கட்டுபாடுகள் விதித்து நாங்கள் தொடர்ந்து கடைகள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி.காம்