ஒளியும் வண்ணமும் பேரின்பமே!

 

– டாக்டர் ஆர்.வி.ரமணி, நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், சங்கரா கண் மருத்துவமனை

உள்ளத்தின் கதவுகளாக விளங்கும் கண்களை இழந்தோருக்கு காலம் காலமாக இலவச சிகிச்சைகள், கண் மாற்று அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை தர்மத்தின் நோக்கத்திலே, லாபம் என்று எதையும் எதிர்பாராமல் இத்தனை ஆண்டுகளாய் கோவை பகுதியில் தொடங்கி, நாட்டின் பல இடங்களில் இருண்ட மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை மீண்டும் ஒருமுறை கொண்டு சேர்க்கும் ஒரு மெழுகுவர்த்தியாக இவர் உள்ளார். தன் வாழ்க்கையை சேவைக்கு என்று அர்ப்பணம் செய்து கொண்டு இன்று வரை கோவைக்கு ஒளியூட்டும் ஒரு அடையாளமாக விளங்கக் கூடியவர் மருத்துவர் ஆர்.வி. ரமணி அவர்கள்.

அவருடைய உழைப்பிற்கு ஒரு மகுடமாக ’பத்ம ஸ்ரீ’ விருது கிடைத்தது என்றே சொல்லலாம். அமைதியான ஒரு தோற்றத்தைக் கொண்ட இவரிடமிருந்து தான் தன்னடக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். தொலை நோக்கு பார்வை கொண்டு எண்ணிலடங்காத மக்களுக்கு பார்வை அளித்த ஒரு நல்ல மனிதர். இந்த மருத்துவர் தினத்தை முன்னிட்டு அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவரது வாழ்க்கைப் பயணம் பற்றிய தொகுப்புகள்.

துளிர்விட்ட ஆசை:

பிளேக் நோய் கோவையை தாக்கியபோது சில மருத்துவர்கள் மக்களுக்கு அதிகமாக உதவினார்கள். அதனால் மருத்துவர்கள் மீது மக்களுக்கு, ஒரு மதிப்பும், மரியாதையும் அளவு கடந்த பற்றுதலும் இருந்தது. மருத்துவர்களின் கம்பீரம், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், பொதுமக்கள் அவர்களுக்கு அளித்த மரியாதை இவற்றையெல்லாம் பார்த்த போது என் சிறுவயதிலே நானும் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். 1950 களில் இருந்தே என் மனதில் ஒரு தீவிரமான விதையாக அந்த ஆசை துளிர்விட்டது.

 

கண்டிப்புடன் கூடிய கனிவு:

நான் ஆர்.எஸ்.புரம் நகராட்சி பள்ளியில் படித்தபோது நடேசன் ஐயர் என்ற தலைமையாசிரியர் இருந்தார். அவரை பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு உத்வேகம் எழும். ஆசிரியர் தொழிலுக்கே உரிய கம்பீரத்தையும், ஒரு மரியாதையையும் வாங்கி கொடுத்தவர் என்றே அவரைக் கூறலாம். என் ஆசிரியர் கோவிந்தராஜ் பிள்ளை, மாணவர்கள் எந்த தவறை செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார். மிக கண்டிப்பானவர். தவறை சரி செய்த பின்னர் அதே அளவு கனிவை மாணவர்களிடம் காண்பிப்பார்.

 

அளவில்லாத மகிழ்ச்சி:

நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதே என் தாய் மற்றும் தந்தையின் உயிர் மூச்சாக இருந்தது. அந்த காலத்தில் மருத்துவம் படிக்க பி.யூ.சி முடித்துவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத சமயத்தில் இரண்டு வருடம் கஷ்டப்பட்டு, அதன் பின்பு மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. அப்பொழுது என் பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

மருத்துவக் கல்லூரியில் நுழைந்த முதல்நாள் வாழ்வின் அடுத்த படியை நோக்கி நாம் செல்கிறோம் என்று மிக உற்சாகமாகவும், ஆக்கப் பூர்வமானதாகவும் எனக்குள் இருந்தது.
கல்லூரியில் சேர்ந்த புதிதில் அவ்வளவாக நான் யாரிடமும் பழக மாட்டேன். என் நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பழகுவேன். நல்ல முறையில் நான் மருத்துவம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. மருத்துவம் படிக்கும்பொழுது முதல் மூன்று தரவரிசை மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஜூனியர்களுக்கு பாடம் எடுக்க வைப்பார்கள். அவ்வாறு அவர்களுக்கு சொல்லி கொடுத்ததினால் எங்களுக்கும் படிப்பு நன்றாக மனதில் பதிந்தது. அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதோடு கற்பித்தலிலும் எனக்கு அதிகளவில் ஈடுபாடு இருந்தது. கல்லூரி முடிக்கும் தருவாயில் என் அணுகுமுறைகள் மாற ஆரம்பித்து அனைவரிடமும் நன்றாக பழகினேன். அதனால் நிறைய நண்பர்கள் வட்டாரங்கள் கிடைக்க ஆரம்பித்தது.

 

ஈடுபாட்டை ஏற்படுத்திய காஞ்சி மகாபெரியவர்:

1972ல் நானும் என் மனைவி டாக்டர் ராதாவும் என்னுடைய தந்தை பெயரில் டாக்டர் ராமநாதன் மெமோரியல் கிளினிக் ஆரம்பித்தோம். 5 வருடத்தில் நன்றாக பயிற்சி எடுத்தேன். ஆனால் மனதிற்குள் இதைத் தவிர வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

அந்த நேரத்தில் காஞ்சி பெரியவர், மருத்துவர்கள் எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என கூறினார். வாரத்தில் ஒரு இரண்டு மணிநேரம் அவர்களுக்கான மருத்துவ சேவையை செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் கூறிய வார்த்தைகள் பெரிய ஈடுபாட்டை எங்களுக்கு கொடுத்ததோடு, உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ஆர்.எஸ் புரத்தில் பட்டாமிராமன் ஐயர் என்பவரால் காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டு கொண்டிருந்தது. அங்கு ஒரு அறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதன் முதலில் ஆரம்பித்தோம். பின்பு, கோவையைச் சேர்ந்த சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து சில மருத்துவ மையங்களை உருவாக்கி, இதை படிப்படியாக வளர்ச்சி அடைய செய்து, தினமும் கிட்டத்தட்ட 1000 பேருக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தோம்.

 

தனித்துவம் வாய்ந்த சேவை:

1985 ல் என்னுடைய நண்பர் நடராஜ், ஒரு மிகப்பெரிய நிலத்தை சிவானந்த புரத்தில் எனக்கு கொடுத்தார். அந்த இடத்தில் தான் சங்கரா கண் மருத்துவமனையை கட்டினோம். இதற்கு வித்திட்டவர் காஞ்சி மகாபெரியவர். ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்றவர்களின் வழிகாட்டுதல்கள் இருந்ததால் தான் இன்று இம்மருத்துவமனை இந்தளவு நன்றாக வளர்ந்துள்ளது.
கண் மருத்துவத் துறையை நாங்கள் தேர்ந்தெடுத்து கொண்டதற்கு காரணம், இந்தியாவில் கிட்டத்தட்ட பல மில்லியன் மக்களுக்கு கண்களில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு, அதில் பல லட்சம் மக்களுக்கும் மேல் பார்வையில்லாத திறன் உள்ளது. இதில் 80 % மக்களுக்கு பார்வை போவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களின் பார்வையை குணப்படுத்தி இருக்கலாம்.

கிராமத்தில் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கும், நல்ல வசதி படைத்தவர்களுக்கும் என அனைவருக்கும் ஒரே மாதிரியான, உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சேவை வழங்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே சங்கரா கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

 

இணையில்லா மகிழ்ச்சி:

நம்மிடம் வரும் நோயாளிகள் நன்றாக குணமடைந்து வீடு திரும்பும்போது அதை பார்க்கும்போது மிகுந்த அலாதி மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு சமயம், எங்களிடம் வந்த இரண்டு வயது குழந்தைக்கு, இரு கண்களிலும் பார்வை திறன் போய்விட்டது. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை வரவழைக்க சாத்தியம் இருந்ததால், அந்த கண்ணில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். மூன்றாவது நாளில் அந்த குழந்தைக்கு பார்வை கிடைத்து விட்டது. ஈடு இணையில்லாத மகிழ்ச்சியை அந்த தருணம் தந்தது.

இதற்கு முன் இங்கு குணமாகி சென்றவர்கள் அனைவரும் அன்புடன் வந்து என்னை நலம் விசாரிப்பார்கள். மருத்துவ சேவை செய்யும்போது நம்முடைய நோயாளிகளிடம் இருந்து கிடைக்கக் கூடிய பாராட்டுதல், நன்றி போன்றவை எல்லாமே ஒரு அளவிட முடியாத அனுபவமாக இருக்கும்.

இத்தனை மக்களுக்கு கண் மருத்துவ உதவிகள் செய்திருந்தாலும், நாளை இதை விட அதிகமாக செய்ய வேண்டும் என்ற உற்சாகமும், உந்துதலும் மனதில் கூடிக் கொண்டே உள்ளது.

 

வாழ்க்கையின் வழிகாட்டிகள்:

அம்மா, அப்பாவின் வழிகாட்டுதலில் தான் அனைத்தும் சாத்தியமாகியது. என் மனைவி ராதா என்னுள் சரிபாதியாக இருந்து, குடும்பத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். அதே சமயம் தொழிலிலும் என்னுடன் ஈடுபட்டு, சங்கரா கண் மருத்துவமனை இவ்வளவு தூரம் வளர்வதற்கு அவரின் ஈடுபாடும் அளவிட முடியாத அர்ப்பணிப்பும் ஒரு காரணம். அனைத்து செயலிலும் எனக்கு உறுதுணையாக இருப்பார். அதேபோல, எங்களது சேர்மன் எஸ்.வி. பாலசுப்ரமணியம் அவர்களும் எந்த ஒரு காரியமும், நன்றாக தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறி எங்களை வழி நடத்துவார்.