16 வயதில் தொடங்கிய பயணம்!

 
– டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன், க்ளினிகல் டைரக்டர், விமன்ஸ் சென்டர்

எப்பொழுதும் முகத்தில் புன்சிரிப்போடும், உற்சாகத்தோடும் இருக்கும் இவருக்கு, வயது என்பது என்றும் ஒரு தடையாக இருந்ததில்லை. மழலையாக ஒரு உயிரை கடவுளால் மட்டுமே படைக்க முடியும். குழந்தை என்ற செல்வம் பெற்றோர்களின் கையில் வரமாக வருவதற்கு மருத்துவர்களும் ஒரு காரணமாக இருக்கின்றனர். அந்தக் குழந்தை என்ற பொக்கிஷ வரம் கிடைக்காமல் ஏங்கும் பலருக்கும் நம்பிக்கை தருபவராய் விளங்குபவர் மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜன். விமன்ஸ் சென்டர் என்ற மருத்துவமனையை நிறுவி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ சேவையை வழங்கி கோவை மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்று வருகிறார்.

 

மருத்துவத்தின் மீது ஈடுபாடு:

என் அம்மா கோவையில் முதன் முதலில் பெண் மருத்துவராக இருந்தவர்களுள் ஒருவர். அவர் மருத்துவமனையில் இருந்து வருவதற்காக நான் காத்திருப்பேன். அதனால் என் சிறுவயது நினைவுகள் எல்லாம் மருத்துவமனைகளை உள்ளடக்கியதாகவே தான் இருந்தது. எனவே மருத்துவத்தை தவிர வேறு சிந்தனைகள் எனக்குள் வந்தது இல்லை. இந்த துறையைப் பொறுத்த வரையில் ஆத்மார்த்தமான ஒரு ஈடுபாடு இருந்தால் தான் அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியும்.

10 ம் வகுப்பு முடித்ததும் மருத்துவம் சேர பி.யூ.சி எடுத்து மருத்துவம் சார்ந்த படிப்பு எடுத்து படிக்க வேண்டும் என்று மருத்துவத் துறையில் எனது பயணத்தை தொடங்குவதற்காக என் 16 வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டேன். அந்த வயதில் வீட்டை விட்டுப் பிரிந்து சென்னை போன்ற நகரத்தில் பெரிய மருத்துவக் கல்லூரியில் படித்தது துணிகரமான ஒன்றாக இருந்தது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. அங்கிருந்த ஆசிரியர்கள், அந்த சூழல் அனைத்தும் சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. அன்றிருந்த ஆசிரியர்களும் மிகச் சிறந்த முறையில் கற்பித்தார்கள். ஸ்டான்லியில் மருத்துவம் படித்த பிறகு வெளிநாடுகளில் பல வருடம் பயிற்சி எடுத்தேன்.

 

திருமண வாழ்வு:

நாங்கள் இருவரும் ஸ்டான்லியில் தான் படித்தோம். என்னை விட கல்லூரியில் இரண்டு வருடம் சீனியர். இருவரின் குடும்பங்களும் தெரிந்த குடும்பங்கள் தான். நான் மருத்துவ பட்டம் வாங்குவதற்கு முன்பே எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒன்றாக தான் மருத்துவ பயிற்சி எடுத்துவிட்டு திரும்பினோம்.
எனக்குள் ஏற்பட்ட உந்துதல்:

ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றிய போது மகப்பேறு மருத்துவமனை துறையை என்னிடம் கொடுத்து முழு பொறுப்பையும் ஒப்படைத்தார்கள். ஆனால் முழுவதும் மகளிருக்கான சிறப்பு மருத்துவமனையை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. மகளிர் உடல் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் அதை நான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
பெண்களுக்கு உடல் நலம் சார்ந்த ஒரு முழுமையான கவனம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதித்த போது அதற்கான தனி மையம் தேவைப்பட்டது. எனக்குள் ஏற்பட்ட ஒரு உந்துதலில் தான் இந்த மையத்தை ஆரம்பித்தேன். அப்படி துவங்கிய இம்மையம் எனது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.

 

பல நெகிழ்ந்த தருணங்கள்:

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கருத்தரிப்பு சிகிச்சையளித்து குழந்தைப் பேறு அளிப்பது உணர்ச்சிகளால் விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணம். குழந்தை எந்த நிலையில் பிறக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். அந்த தருணங்களில் பிரசவத்தில் குழந்தையை வெளியில் எடுப்பது மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு சுகப் பிரசவம் என்பதே அரிதாகிவிட்டது. குழந்தை இல்லாதவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும்போது அது வேறு விதமான உணர்வாக இருக்கும். நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் உள்ளது.

என் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் திரும்பிச் செல்லும்போது 98% மகிழ்ச்சியுடன் தான் செல்வார்கள். குழந்தை இல்லாத ஏக்கத்துடன் வந்தவர்கள் வீடு திரும்பும் போது பிறந்த குழந்தையுடன் மிகுந்த மனத் திருப்தியுடன் திரும்புவார்கள்.

குடும்பத்தாரின் ஆதரவு:

அந்த காலத்திலேயே என் பெற்றோர்கள் என்னை புரிந்து கொண்டு நான் ஆசைப்பட்டதை செய்ய அனுமதித்தார்கள். ஒரு மகப்பேறு மருத்துவராக இருக்கும்போது இரவும் பகலுமாக வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். அந்த சூழலில் என்னை அவர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள்.

என் கணவர் மற்றும் குழந்தைகளும் என்ன விதமான வாழ்க்கையை நான் ஆசைப்படுகிறேன் என்பதை புரிந்து இருந்தார்கள்.

 

இடைவிடாத சவால்கள்:

நம் நாட்டில் இப்போதுள்ள மருத்துவ தொழில் நுட்பங்கள் அனைத்தும், 1980 களின் தொடக்கத்தில் கனடாவில் நான் பணியாற்றும் போது அங்கு இருந்தது. இந்த மையத்தை தொடங்கி பணியாற்றும் போது ஒவ்வொரு தொழில் நுட்ப இயந்திரங்களையும் இங்கு கொண்டு வர சிரமம் இருந்தது. எல்லா சிகிச்சைகளும் தொழில் நுட்பங்களும் எளிதாக கிடைக்கும் போதுதான் அனைத்தும் சாத்தியமாகிறது.

கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாத்து சரியான முறையில் டெலிவரி பார்ப்பதற்கு, குழந்தையை பாதுகாப்பதற்கு, குழந்தை பிறந்த உடன் அதற்கு வேண்டிய தேவைகளை கொடுப்பது என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருந்தால் தான் சாதிக்க முடியும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பிறந்த குழந்தையை இட மாற்றம் செய்து கொண்டு செல்வது எல்லாம் இயலாத காரியம்.

மருத்துவமனைக்கு தேவையான ஒவ்வொரு கட்டமைப்புகளையும் செய்வது ஒரு மிகப்பெரிய சவலாகத்தான் இருந்தது. ஒரு புதிய தொழில்நுட்பத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு பழக்குவதும், புரிய வைப்பதும் ஒரு பெரும் சவாலாக இருந்தது. ஒன்றிக்கு பின் ஒன்று என இடைவிடாத சோதனைகள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் என் மனதும் ஒரு தடையை எதிர்கொண்ட பின் அடுத்த சவாலை தேடும். மருத்துவத்துறையில் எப்பொழுதும் சவால்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.

 

அணுகுமுறையே வாழ்க்கை:

நான் ஒரு இலக்கை அடைந்த பிறகு, அடுத்த இலக்கு என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உடனடியாக தோன்றும். அதனால் நான் சாதித்து விட்டேன் என்றே நினைத்ததில்லை. தேவைப்பட்ட ஒரு செயலை செய்கிறோம். பின் அதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் அணுகுமுறையும், நாம் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நமது மகிழ்ச்சியும், நிம்மதியும் அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டால் மனிதருக்கு அனைத்தும் ஒரு பிரச்சனையாக தான் தெரியும். அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தால் அது வேறு விதம்.

மகத்தான செயல்:

இந்தத் துறையில் உள்ள ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். கொரோனா காலத்தில் தன்னைப் பற்றி கவலை கொள்ளாமல் முன் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து சிக்கல்களையும் சமாளித்து வேலை செய்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட இந்த இரண்டு வருடத்தில் மருத்துவத் துறை உலகத்திற்காக செய்தது அனைத்தும் ஒரு மகத்தான செயல்.