மருத்துவம் என் அம்மாவின் கனவு!

 
– டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன், இயக்குனர், பி.எஸ்.ஜி மருத்துவமனை

கோபி செட்டிபாளையத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி கற்றவர் இவர். ஆங்கிலம் பேச இருக்கும் தயக்கங்களை தகர்த்தெறிந்து, சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு, மருத்துவம் பயின்று இருதயவியல் துறையில் பிரபல மருத்துவராக பல முன்னணி மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். புகழ்பெற்ற மருத்துவமனையான பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருதய துறையை துவங்கியதிலிருந்து, இப்போது இயக்குனராகவும், தனது பணியை திறம்பட செய்து வருகிறார் டாக்டர் ஜெ.எஸ். புவனேஸ்வரன். அவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை இந்த மருத்துவர் தினத்தில் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

 

அம்மாவின் கனவு மருத்துவம்:

கிராமத்து சூழலைக் கொண்ட கோபி செட்டிபாளையத்தில் பிறந்த நான், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தகப்பனார் தீவிர விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவர். அதனால் எனக்கும் விவசாயத்தின் மேல் அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் தமிழ்வழி கல்வி கற்று, எஸ்.எஸ்.எல்.சி யில் கோவை மாவட்டத்தில் முதல் மாணவனாக வந்தேன்.

என் அண்ணாவிற்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்த காரணத்தினால் அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையை என் அம்மாவினுடைய கனவு என்றே சொல்லலாம்.

நான் நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்ததால் எனக்கு மருத்துவ சேர்க்கை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த கல்லூரியிலே இடம் கிடைத்து, 1979 ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.

 

மருத்துவக் கல்லூரி அனுபவம்:

கிராமத்தைச் சேர்ந்து, தமிழ் வழியில் படித்து விட்டு, சென்னை மாதிரியான ஒரு இடத்திற்கு செல்லும்போது முதலில் பயமாக இருந்தது. நண்பர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்ட போது அவர்களில் சிலர் சென்னை லயலோ கல்லூரியில் படித்தவர்களாக இருந்தனர். ஆனால் நான் கோபி கலைக் கல்லூரியில் படித்தேன். அதனாலேயே ஒரு சிறிய தாழ்வு மனப்பான்மை எனக்குள் இருந்தது. தமிழ்வழியில் படித்து வந்ததால், ஆங்கிலம் பேச பயமாக இருந்தது. ஆங்கிலம் அறிந்திருந்தேன் ஆனால் ஆங்கில உரையாடல் இருந்தது கிடையாது.

நான் படித்த காலத்தில், ரேகிங் அதிகமாக இருந்தது. நானும் அதிகமாக ரேகிங் செய்யப்பட்டுள்ளேன். நன்றாக பாடுவேன் என தெரிந்து கொண்டதால் என்னை பாடச் சொல்லுவார்கள். இதனால் நிறைய சீனியர்கள் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர். ரேகிங்கில் நல்லபடியாக ஒருவர் மற்றொருவரை நடத்தும்போது அதில் நட்பும் உள்ளது. சில விரும்பத்தகாத விசயங்களும் உள்ளது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதில் சில நண்பர்கள் நான் ஆங்கிலத்தில் பேச எனக்கு கற்றுக் கொடுத்து உதவினார்கள். மருத்துவக் கல்லூரி சேர்ந்த சில நாட்களிலே நான் நன்றாக பாடுவேன் என தெரிந்ததால் என்னை அனைவருக்கும் தெரிந்திருந்தது. அடிக்கடி நான் பாடக்கூடிய பாட்டு ’உன்னை அறிந்தால்’ பாடல் தான். அதை பாடும்போது என்னை அறியாமல் ஒரு உற்சாகம் என் மனதிற்குள் வந்துவிடும்.

டி.எம்.சௌந்தரராஜன் பாடல்கள் தான் எனக்கு அதிகம் பிடித்தமான பாடலாக இருந்தது.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் பாடங்களை புரிந்து கொள்ள சிரமம் இருப்பதை ஆசிரியர்கள் உணர்ந்து இருந்தார்கள். அதனால் அனாடமி, பிசியாலஜி போன்ற பாடங்களை சொல்லிக் கொடுப்பதில் ஆசிரியர்கள் எங்கள் மீது தனிக்கவனம் எடுத்து கற்றுக் கொடுத்தார்கள்.
நான்காவது வருட மருத்துவப் படிப்பில், நான் நன்றாக தேறிவிட்டேன் என்றே சொல்லலாம். மெடல் எக்ஸாமில் முதல் முறையாக கலந்து கொண்டு, முதலில் வந்தேன். அது எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. கிராமத்தை சேர்ந்து பயத்தோடு போனாலும் நல்ல நண்பர்கள் சகவாசம், ஆசிரியர்களின் கவனிப்பு போன்றவை என்னை முன்னோக்கி அழைத்து சென்றது. ஸ்டான்லி கல்லூரியை பொறுத்தவரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள்.

எனது கடைசி வருட மருத்துவப் படிப்பில் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக வந்து, சிறந்த மாணவனாக நான் வெளியே வந்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
கிராமத்தை சேர்ந்தவன் என்பதால் தாழ்வு மனப்பான்மை போன்ற எண்ணங்கள் அவசியம் கிடையாது என்பதும், சாதிக்கமுடியும் என்ற ஒரு நம்பிக்கையும் எனக்குள் வந்தது.

 

இருதயவியல் துறை:

மணிப்பாலில், எம்.டி படித்து முடித்து விட்டு, கோவையில் சில மருத்துவமனைகளில் பயிற்சி எடுத்து கொண்டு, கோபி செட்டிபாளையத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது.

அதனால் எம்.டி முடித்துவிட்டு கோவையில் உள்ள சில பிரபல மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றினேன். அப்போதுதான் எனக்கு, எம்.டி படிப்போடு நிறுத்த முடியாது என்றும், இதற்கும் மேல் படித்தால் தான் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என தோன்றியது. அந்த சமயத்தில் எனக்கு இருதயவியல் துறையின் மீது விருப்பம் அதிகமாக இருந்தது. குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் இருதயவியல் துறையில் சேர்ந்து பணியாற்றிய போது, எனக்கு மேல்படிப்பு டி.எம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

 

பி.எஸ்.ஜி பயணம்:

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நான் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்கள் அப்போதைய நிர்வாக அறங்காவலராக இருந்த ஜி.ஆர். கார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த ஜேம்ஸ் ஞானதாஸ். இவர்கள் இருவரும் தான் பி.எஸ்.ஜி க்குள் நான் வருவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருதயத் துறையை தொடங்குவதற்கான ஆலோசனைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த சமயத்தில், என்னை நேர்காணல் செய்தார்கள். இருதயத் துறையை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் இந்த சமயத்தில் நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் என்னை கேட்டுக் கொண்டார்கள். அதனடிப்படையிலே நான் பி.எஸ்.ஜி க்குள் வந்தேன். பி.எஸ்.ஜி யில் இருதயத் துறையை ஆரம்பிக்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்து, நவம்பர் 28 ம் தேதி இரு நோயாளிகளுடன் என்னுடைய முதல் நாளை ஆரம்பித்தேன்.

 

மைல்கல்கள் ஏராளம்:

1994 ல் இருந்து 2013 வரை இருதய நிபுணராக பயணித்து, நான் கடந்து வந்த மைல்கல்கள் ஏராளம். இருதய மருத்துவனாக என் பணிகளை நான் நல்ல முறையில் செய்து, சிறந்த இருதய மருத்துவர் என்ற பெயர் பெற்றேன். பல தருணங்களில், நோயாளிகள் நன்றி கூறி கண் கலங்கும்போது நானும் கண் கலங்கி விடுவேன்.

தொழில் மட்டுமே வாழ்க்கை என்றில்லாமல் அனைத்தையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். 2014 ல் அபுதாபி சென்று அங்குள்ள இரண்டு பிரபலமான மருத்துவமனையில் மருத்துவ நிர்வாகங்களை கவனித்து கொண்டேன். அங்கிருந்து கோவை வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நிர்வாக பொறுப்புகளை பார்த்து வருகிறேன்.
நாம் சாதித்து விட்டோம் என்பதை என்றும் நாமே கூறிக் கொள்ள முடியாது. நாம் என்ன அடைந்துள்ளோம் என்பது நமக்கு தெரியாது. சாதனை என்பது நகர்ந்து கொண்டே இருக்க கூடிய ஒரு இலக்கு. வெற்றி என்பது ஒரு இடத்தை அடைவது மட்டுமில்லை, அது ஒரு பயணம்.

 

உதவும் மனப்பான்மை:

ஒரு மருத்துவராக ஒருவருடைய வாழ்க்கையை காப்பாற்றி, அவர் வாழ்வதற்கு நம்மால் சில மாற்றங்களை கொண்டு வரமுடியும்.

மருத்துவனாக உள்ளே நுழையும் போது நம்மால் ஒருவருக்கு நல்லது செய்து, உதவி செய்திடவேண்டும் என்ற மனப்பான்மை இருக்க வேண்டும். மருத்துவ சேவையை செய்திடும் போது அதன் மூலம் கிடைக்க கூடிய நிம்மதிக்கும், நிறைவுக்கும் ஈடு இணை எதுவும் கிடையாது.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் அத்தனை மருத்துவ சகாக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.