சவால்கள் தான் வளர்ச்சியின் முதுகெலும்பு

 
– டாக்டர் எஸ்.ராஜசேகரன், தலைவர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைத் துறை, கங்கா மருத்துவமனை

நம்முடைய நாட்டில் கற்பிக்கக்கூடிய கல்வி முறையில் பயின்று, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று திறமைகளை கற்று, சிலர் திரும்பி வருவார்கள், பலர் அங்கேயே தங்கிவிடுவார்கள். அப்படி அங்கு தங்கிவிட்டு நம்முடைய நாடு இன்னும் வளர வேண்டும் என அங்கிருந்து சொல்வார்கள். அவர்களுக்கு மத்தியில் சிலர் மட்டுமே அங்கிருந்து வந்து நம் நாடு வளர வேண்டும் பிறந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணுவார்கள். அவ்வாறு மக்களின் உடைய வாழ்வில் ஏதாவது மாற்றத்தை வழங்க வேண்டும் என்கின்ற முனைப்போடு செயல்படும் நபர்களில் ஒருவராக மருத்துவர் ராஜசேகரன் அவர்களும் திகழ்கிறார். பல விருதுகளை வாங்கி மக்களுக்கு நன்கு அறியப்பட்டும், நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

 

மருத்துவத் தலைமுறை:

இளம் வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் கொண்டு பொறியாளராக வரவேண்டும் என்கின்ற ஆசை கொண்டிருந்தார். இவருடைய குடும்பம் ஒரு மிகப்பெரிய மருத்துவக் குடும்பம் என்றாலும், அவருடைய தகப்பனார் மருத்துவத் துறையில் கோவையில் பல பெரிய சாதனை செய்தவர்களில் ஒருவராக அடங்குவர் என்றால் அது மிகையாகாது. தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை மருத்துவக் குடும்பமாக வலம் வரும் இவரது குடும்பத்தில் பெரும்பாலும் மருத்துவ ரீதியான கலந்துரையாடல்களே அதிகமாக நிகழும்.

 

வழிகாட்டி:

10ம் வகுப்பிற்கு பிறகு தனது பி.யூ.சி படிப்பை முடித்து விட்டு சென்னையில் தான் ஆசைப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவர் ஆசைப்பட்ட கல்லூரி கிடைக்காமல் கோவை மருத்துவக் கல்லூரியிலே இடம் கிடைத்தது. மருத்துவக் கல்லூரியில் அப்பொழுது அவருக்கு வழி காட்டக் கூடிய நபராக பிரபல நரம்பியல் மருத்துவர் பிரனேஷ் போன்ற ஆசான்களும் இருந்தனர். அதோடு நன்றாக படிக்கக் கூடிய சூழலும் அவருக்கு கோவையில் அமைந்தது.

அவரது பேராசிரியர் ராமதாஸ் கையாண்ட புதுவித எலும்பியல் அறுவை சிகிச்சை முறைகள் அந்த துறையை தனது சிறப்புத் துறையாக அவர் தேர்ந்தெடுக்க ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதனால் எலும்பியலில் அதிக ஆர்வம் கொண்டு, அறுவை சிகிச்சையில் கால் பதிக்க வேண்டும் என எண்ணினார். ஒவ்வொரு கால கட்டத்திலும் எலும்பியல் துறையில் புது புது முறைகள் அறிமுகமாகி புதிய தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அது எலும்பியல் துறையை தேர்ந்தெடுக்க ஒரு உத்வேகத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல், அப்பொழுது அந்த துறை பல தொழில்நுட்ப முன்னேற்றங்களால் மேலும் ஏற்றமும் அடைந்து வந்தது.

 

வளர்ச்சிக்கு வித்திட்டவர்:

கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் கற்று முடித்து விட்டு ஒரு குறுகிய கால வெளிநாட்டு பயிற்சி அவசியம் என்று கருதி அதன் மூலம் தனது பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள முடியும் என எண்ணி பிரிட்டன் சென்றார். வெளிநாட்டில் எலும்பியல் சம்பந்தமாக அதிகம் கற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் அதற்கும் மேலாக வாழ்க்கைப் படிப்பினையும் அதிகமாக இவர் கற்றுக் கொண்டார்.

இளம் வயதிலேயே ஒரு நிரந்தரமான பெரிய பதவியில் பொறுப்பேற்க வாய்ப்பு கிடைத்தும், அதை விடுத்து இந்தியாவிற்கு மீண்டும் திரும்பி வருவோம் என்று தாய், தந்தைக்கு செய்த சத்தியத்திற்காகவும், இங்கு இருக்கக் கூடிய மக்களுக்கு உதவ வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவும் அங்கிருந்து, ராஜசேகரனும், அவரது அண்ணன் ராஜ சபாபதியும் கோவைக்கு திரும்பினர்.

எலும்பு முறிவு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் சர்வதேச அளவில் பிரபலத்துவம் பெற்ற கங்கா மருத்துவமனை இன்று 650 படுக்கைகளுக்கும் மேல் கொண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான தனது பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் மருத்துவமனையின் தொடர் வளர்ச்சிக்கு வித்திட்டார். தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து வந்து பல மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் பயிற்சி எடுத்து திரும்புகிறார்கள்.

 

பக்கபலமான வாழ்க்கைத் துணை:

அவருடைய மனைவி ரமா அவர்களும் மிகவும் அர்ப்பணிப்பு கொண்டவர். ராஜசேகரனின் கனவிற்கு பக்க பலமாகவும், அவருடைய மருத்துவ சேவைக்கு மிகவும் உதவியாகவும் இருந்தார். தன் தாய் மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதை போலவும், தன் அன்னி மருத்துவமனைக்கு உறுதுணையாக இருப்பது போலவும், ரமாவும் கங்கா மருத்துவமனையின் உடைய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கின்ற ஒருவர் என்றே சொல்லலாம்.
அவர்களுடைய தனி திறமையாக கலைத்துறை இருந்திருந்தாலும், அதை ஒரு கட்டத்தில் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, தனது குடும்பமான கங்கா மருத்துவமனையின் உடைய வளர்ச்சிக்கு நிர்வாக ரீதியாக என்ன உதவி செய்ய வேண்டுமோ அதற்கான பட்டப் படிப்புகளை திருமணத்திற்கு பிறகும் பயின்று அதிலும் பட்டம் பெற்று நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறார். இன்றும் கங்கா மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியை அவர்தான் கவனித்து வருகிறார்.

 

சவால்களும், சுவாரஸ்யங்களும்:

வாழ்வில் இவர் கடந்து வந்த பாதைகள் அனைத்தும் இவருக்கு ஏறுமுகமாக மட்டுமில்லாமல், பல சவால்களையும் சந்தித்து அதையும் கடந்து வந்திருக்கிறார். ஆனால் சவால்களை சந்திப்பதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது அதை கடந்து வருவதும் ஒரு இன்பம் தருவதாக இருப்பதாக ராஜசேகரன் கூறுகிறார்.

இத்தகைய சவால்களைத் தாண்டி எலும்பு முறிவு மருத்துவமனை என்றாலே அனைவரும் கங்கா மருத்துவமனையைக் கூறும் அளவிற்கு சர்வதேச அளவில் புகழைப் பெற்று விருதுகளை வாங்கியுள்ளது.

இந்தியாவிற்கு வந்தது தான் அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. அன்று அவர் பிரிட்டனில் இருந்திருந்தால், மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பார். ஆனால் சொந்த மண்ணின் மக்களுக்காக மருத்துவ சேவை செய்வது தான் இவருக்கு ஆத்ம திருப்தியளிப்பதாக இருந்தது. இம்மருத்துவமனையில் எத்தனையோ வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தனை வருட கால அனுபவத்தில் வாழ்க்கை இவருக்கு கற்றுக் கொடுத்த பாடம் அதிகமாக இருந்தது. குடும்பமாக இருந்து இத்தனை சாதனைகளையும் இவர்கள் செய்துள்ளனர்.

வெளியில் இருந்து பார்க்கும்போது இதன் வெற்றி மட்டும் தான் தெரியுமே தவிர அதற்கு பின் இருந்த சவால்களையும், தடைகளையும் கடந்து வந்த பாதை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
“உண்மையான மகிழ்ச்சி என்பது சாதிப்பதில் மட்டுமில்லை. சாதனையை அடையக் கூடிய பயணங்களின் போது கிடைக்கும் அனுபவங்களில் தான் மகிழ்ச்சி உள்ளது” என்கிறார் ராஜசேகரன்.

 

 

தியாக வாழ்வு:

மருத்துவராக இருக்கும்போது நிறைய தியாகங்களை செய்ய வேண்டி வரும். ஒரு மருத்துவரின் வாழ்வில் அவர் செய்யும் தியாகங்கள் அனைத்தும் வாழ்வின் ஒரு பகுதி. இந்த கொரோனா காலத்தில் மருத்துவர்கள் தங்களது குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறைவதோடு, அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலனை பாதுகாப்பதும் மருத்துவர்களுக்கு சவாலாக இருக்கிறது. மருத்துவர்கள் மட்டுமல்லாமல் முன்கள பணியாளர்களாக உள்ள அனைவரும் இந்த இக்கட்டான சமயத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களது சேவையை வழங்கி வருகின்றனர்.

“நெருக்கடி சமயத்தின் போதுதான் மனிதர்களின் உண்மையான முகம் வெளி வரும் என்பார்கள் அதுபோலதான் இப்பொழுது மருத்துவத் துறையின் ஈடு இணையில்லா சேவை வெளியில் தெரிகிறது. உலகத்தின் அனைத்து மூலைகளிலும் உள்ள மருத்துவர்களுக்கும் வாழ்த்துகள்”.