பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க வேண்டும்!

 

– டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி,தலைவர், கே.எம்.சி.ஹெச்

சமுதாய வளர்ச்சிக்கு அனைவருக்கும் சீரான கல்வி கிடைக்கவேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதும் முக்கியம். இந்த இரு பெரும் துறையில் கால்பதித்து, இன்று ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் ஒரு மாற்றத்தை மலரச் செய்துவருபவர் கொங்கு மண்ணின் மருத்துவ சக்கரவர்த்தி டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி.

1970களிலே அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றிய இவர், நினைத்திருந்தால் சென்னையிலோ அல்லது மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலோ மருத்துவமனைகளை நிறுவியிருக்கலாம். ஆனால் தான் படித்து வளர்ந்த கோவை பகுதி மக்களுக்கும் சர்வதேச மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டுமென எண்ணி, 1990ல் கே.எம்.சி.ஹெச் என்ற மிகப்பெரிய மருத்துவமனையை நிறுவினார். தொழில்நுட்பம், மருத்துவ நிபுணத்துவம், நம்பிக்கையான சேவை ஆகியவற்றில் சிறந்துவிளங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையின் முன்னணி மருத்துவமனையாக இருந்து வருகிறது கே.எம்.சி.ஹெச்.

இந்த மருத்துவர் தினத்தையொட்டி தன்னுடைய வாழ்க்கையின் சில தருணங்களை நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

சிறுவயது கனவு:

ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். என் பெற்றோருக்கு பெரியளவில் கல்வி பின்னணி இல்லை. ஆனால் என்னை நன்றாக படிக்க வேண்டுமென ஊக்கம் தந்து வளர்த்தனர். எனது தந்தை எனக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்த்தார். எனக்கு அவர் தான் எல்லாம். நான் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வேன் என்று என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னுடைய வாழ்வில் எல்லாவற்றிலும் துணையாக இருந்தார் அப்பா.
எனக்கு சிறுவயதிலேயே மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே நான் டாக்டர் ஆக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

மாமனிதர்:

நான் பெருந்துறையில் அரசுப் பள்ளியில் பயின்றேன். கற்கும் காலத்தில் நல்ல ஆசான் கிடைத்தால் படிப்பையும் தாண்டி பல திறமைகளையும் குணங்களையும் வளர்த்துக் கொள்ளலாம். எனக்கு அப்படி ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தார். அவர் பெயர் ராமராஜு நாயுடு. என் பள்ளி காலத்தில் மறக்கமுடியாத ஆசிரியர் அவர். ஒழுக்கம், கடின உழைப்பு, நாணயம், படிப்பின் முக்கியத்துவம் மற்றும் காந்தியம் ஆகியவற்றை எனது மனதில் ஏற்றியவர் இந்த மாமனிதர் தான். அந்த காலத்து ஆசிரியர் என்றால் அவர்தான் உதாரணம்.

பள்ளிக் காலத்தில் நான் மிகச் சிறப்பாக படித்தேன், நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். ஆனால் முதல் நாள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கால் வைத்த போது திருதிரு என்று முழித்தேன், அதற்கு காரணம் திரும்பிய திசை எல்லாம் ஆங்கிலமாக இருந்ததே.

 

கே.எம்.சி.ஹெச் விதை:

நான் தமிழ் முறைக் கல்வி பயின்றவன். கல்லூரியில் முழுக்க முழுக்க ஆங்கிலக் கல்வி முறை தான். ஆனால் அதைக் கண்டு கலங்காமல் சமாளித்து வெற்றி பெற்றேன். கல்லூரி காலத்தில் நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அங்கு எங்களுக்கு என ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் தான் பிற்காலத்தில் கே.எம்.சி.ஹெச். தொடங்குவதற்கும் உதவியாக இருந்தார்கள். பல நல்ல நண்பர்கள் இருந்தபோதிலும் டாக்டர் கே.சி.ராமசாமி அவர்களில் முக்கியமானவர். கே.ம்.சி.ஹெச் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் அவர்.

 

அரசு மருத்துவமனை பணி:

எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவக் கல்லூரி படிப்புகளை முடித்த பின்னர் 1973 லிருந்து 75 வரை கோவை அரசு மருத்துவமனை கல்லூரியில் விரிவுரையாளராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் இன்னும் நினைவில் உள்ளது.
அப்போதெல்லாம் பல நபர்கள் வெறிநாய் கடிக்கான சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவர். ஆனால் யாரையும் காப்பாற்ற முடியாத நிலை தான் நிலவியது. அப்போது நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவரை வெறி நாய் கடிக்க நேர்ந்தது. குழந்தையையும், அந்த பெண்ணையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதற்கு காரணம் வெறி நாய் கடிக்கு உலகிலேயே மருந்து கிடையாது. ஆனால் தகுந்த நேரத்தில் வந்தால், அந்த நோய்க்கு காரணமான வைரஸ் உடம்பில் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவரலாம். நான் அந்த காலத்தில் வெறிநாய்கடி பிரிவை கோவை அரசு மருத்துவமனை கல்லூரியில் தொடங்கி வைத்தேன். இதை என்னால் மறக்கமுடியாது.

 

அமெரிக்காவில் உயர்படிப்பு:

அதற்கு பின் 1975ம் ஆண்டில் உயர் படிப்புகளுக்காக அமெரிக்கா சென்று உள் மருத்துவத்தில் உயர் பயிற்சி பெற தொடங்கினேன். அமெரிக்காவின் மருத்துவப் பாடங்களை படிக்க பிற நாட்டிலிருந்து வரும் மாணவர்கள் தகுதி உடையவர்களாக இருக்கின்றனரா என்று திறன் அறியும் தேர்வான ஈ.சி.எப்.எம். ஜி. யை என்னுடன் படித்தவர்கள், எனக்கு முந்தைய ஆண்டு பயின்றவர்கள் எழுதினர். நான் கோலாலம்பூர் சென்று பரீட்சை எழுதி, பாஸ் ஆகி அமெரிக்கா சென்றேன்.

என்னால் அந்த நாட்களை மறக்கமுடியாது. 1975 மே மாதம் 17ம் தேதி அமெரிக்கா சென்றோம். சில ஆண்டுகளில் படிப்புப் பகுதி எல்லாம் நிறைவடைந்து விட்டது. ஒரு கட்டத்தில் வேலை ஏதும் இல்லை. குடும்பத்துடன் சென்று வேலை இல்லாத நிலை வருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது என்னுடைய எம்.டி வகுப்பு தோழன் டாக்டர் பஞ்சநாதன் திடீரென அழைத்தார். “டேய் வா… எங்களது மருத்துவமனையில் ஒரு இடம் இருக்கிறது வா” என்றார். ஜூன் 28 டேனியல் டிரெய்க் நினைவு மருத்துவமனை, சின்சினாட்டி, ஓஹியோவில் சேர்ந்தேன். இதை மறக்க முடியாது. பின்னர் 1985 வரை அமெரிக்காவில் மருத்துவராக பணியில் ஈடுபட்டேன்.

 

நண்பர்கள் ஆதரவு:

இந்திய நாட்டை விட அங்கு எப்படி மருத்துவம் செய்கிறார்கள் என்பதை கற்றறிந்து கொள்வது தான் எனது நோக்கமாக இருந்தது. அங்கேயே தங்க வேண்டும் என்று எப்போதும் நினைத்தது இல்லை. அமெரிக்க முறையில் நமது மருத்துவமனைகள் மாற வேண்டும். அங்கு கிடைக்கும் எல்லா வசதிகளும் நம்மிடம் இருக்கவேண்டும் என்ற மனத் தாக்கம் தான் இங்கு கே.எம்.சி.ஹெச். தோற்றுவிக்க முக்கிய காரணம்.

அதற்கு என்னுடன் படித்தவர்கள், எனது நண்பர்கள், வெளிநாடு, இந்தியாவில் உள்ளவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர். 1985க்கு பிறகு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையை உருவாக்க முயற்சிகளை நண்பர்களோடு சேர்ந்து எடுத்தேன். 1990 ஆம் ஆண்டு ஜூன் – 24 ல் அது உருவாகியது.
வெறும் 200 படுக்கைகள் கொண்டு தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இன்று 800க்கும் மேல் படுக்கைகள் கொண்ட பலதரப்பட்ட சிகிச்சைகள் வழங்கும் சிறப்பு மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது. எனக்கு வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற கனவு இருந்தது. கனவுடன் கூடிய உழைப்பு, நல்ல சூழல், நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படை எண்ணம், இறைவன் அருள் இவை அனைத்தும் எண்ணியதை முடிக்கச் செய்தது.

 

இதற்கு முடிவு இல்லை:

அனைத்தையும் செய்து விட்டேனா? என்று கேட்டால் இல்லை… இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியது இருக்கிறது. மக்கள் சேவை மகேசன் சேவை. அதற்கு முடிவே இல்லை. என்னால் இன்னும் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வேன்.
இந்த மருத்துவர் தினத்தில், மக்கள் நலன் காக்க அரும்பாடு படும் அத்தனை மருத்துவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக உள்ள அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள், பாராட்டுக்கள்.