கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் புதிய நடைமுறை!

கோவையில் தடுப்பூசி மையங்களில் பொது மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக மாநகராட்சியில் ஒரு நாளும், ஊரகப் பகுதிகளில் ஒரு நாளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதாரத் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர தொழிற்சாலை பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் அரசு மையங்களுக்கே வருகின்றனர். பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒவ்வொரு மையத்திலும் தினசரி 150 முதல் 200 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுவருகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக மாநகராட்சியில் ஒருநாள், ஊரகப் பகுதிகளில் ஒருநாள் என்று தடுப்பூசி செலுத்தும் புதிய நடைமுறையை சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு நாள் மாநகராட்சியிலும், மறு நாள் ஊரகப் பகுதிகளில் உள்ள மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மையத்தில் 400 முதல் 500 தடுப்பூசிகள் வரை செலுத்த முடியும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியும்.

அதன்படி நேற்று ஊரகப் பகுதிகளில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நடைமுறையால் எந்தவித பிரச்னையுமின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. அதே போல் இன்று மாநகராட்சியில் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.