தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10% தள்ளுபடி: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 2வது அலையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் 3வது அலை பயங்கரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பல பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, 10 சதவிகித தள்ளுபடி என அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்கள், இந்தியாவுக்குள் இந்த சலுகையை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும்.

இந்த தள்ளுபடிக்காக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக வழங்கியுள்ள சான்றிதழை, டிக்கெட் புக்கிங் செய்யும்போது சமர்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஆரோக்கிய சேது மொபைல் செயலி தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான தகவலை, விமான நிலைய செக் இன் கவுன்டர்/போர்டிங் செய்யப்படும் இடங்களில் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க இந்த திட்டத்தை, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.