யோகா ஓர் வாழ்க்கை முறை!

வரலாற்று ரீதியாக பார்த்தால், யோகா என்ற கலை இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்திலிருந்து நம்முடன் இருந்துவருகிறது. இதன் பிறப்பிடம் இந்திய நாடே.

இன்று யோகா என்பது  பல நாடுகளில்  ஆரோக்கிய வாழ்விற்கான முக்கிய வாழ்க்கை முறையாக பங்குவகுக்கின்றது. யோகாவின் நன்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைக்க 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம், சர்வதேச யோகா நாளில் “நல்வாழ்விற்கான  யோகா” என்ற மையக்கருவில்  ஜூன் 21-ஆம் தேதி உலகெங்கும் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த கருவானது தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கேற்ப பொருத்தமான ஒன்றாகவும் அமைகிறது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, யோகா என்பது நம் நாட்டின் பாரம்பரியமாக, அறிவியலாக மற்றும் வாழ்க்கை முறையாக இருந்துள்ளது.  உடல், மனம், ஆத்மா என ஆரோக்கியத்தின் பல பரிணாமங்களை மேம்படுத்தும் வழிமுறைகளை கொண்டதாய்  யோகா  உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதை வெறும் ஆசனங்களுடனோ அல்லது வெறும் உடல் தோரணையுடனோ ஒப்பிடுவது சரியானதாக இருக்கமுடியாது.  யோகா என்பது  பிராணாயாமம்  எனப்படும் மூச்சுப்  பயிற்சிகள், ஆசனங்கள் எனும்  உடல் தோரணைகள், உடல் தளர்வு நுட்பங்கள் மற்றும் கிரியாக்கள் எனும் சுத்திகரிப்பு நடைமுறைகள், முத்திரைகள் எனப்படும் கை சைகைகள் மற்றும் தியானம் ஆகியவற்றின் கலவையாகும். பண்டை கால புத்தகமான யோகா சூத்ராவில் யோகாவை பற்றி முதலில்  விவரிக்கப்பட்டுள்ளது .

யோகாவில்  ஹத யோகா, அஷ்டாங்க யோகா, குண்டலினி யோகா, வின்யாச யோகா, பவர் யோகா என பல வகைகள் உள்ளது. அவற்றில், ஹத யோகா பயிற்சி இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும்  மிகவும் பிரபலமாக உள்ளது. யோகாவை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான தகவல் என்னவென்றால் இது எந்தவொரு குறிப்பிட்ட கலாச்சாரத்துக்கோ, நாட்டிற்கோ, பாலினதிற்கோ, மத நம்பிக்கைக்கோ  சமூகத்திற்கோ உரியது அல்ல. இது அனைவருக்குமானது.

இந்த பெருந்தொற்று காலத்தில், கொரோனா வைரஸ் எனப்படும் நுண்கிருமியினால் பாதிப்படையாத நபர்களுக்கு கூட தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் நிலவுகிறது. தொற்றினால் தனது அன்புக்குரியவர்களை தவறவிட்டவர்கள், பணியை இழந்தவர்கள், தனிமை காரணமாகவும்,  தொழில் பாதையில் இடையூறு ஏற்படுவது போன்ற பலவற்றினால் விரக்தியில் உள்ளவர்கள் ஆகியோர்க்கும்  கூட தற்போது  மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கொரோனாவால் ஏற்பட கூடிய கவலை மற்றும் மன அழுத்தத்தினை சமாளிக்க ஒரு ஆரோக்கிய வழிகாட்டியாக யோகாவை பரிந்துரைக்கிறது உலக புகழ்பெற்ற  ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் வஜ்ரம் என்ற திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து குணமானோரின் உடல் நலனை கருத்தில் கொண்டு  அவர்கள்  மீண்டும் திடமாக இருக்க  தேவையான யோகா, பிசியோதெரபி மற்றும் டயட் கவுன்சிலிங் ஆகியவற்றை உள்ளடக்கிய  சேவைகளை இணையதளம் மூலம்  நடத்துகிறோம்.

நம்முடைய  நவீன வாழ்க்கை முறை ஒருபுறம் சொகுசு, சுகம், வசதி ஆகியவற்றை தந்தாலும்  மறுபுறம் வாழ்க்கையில்  ஏற்படும் அன்றாட சவால்களால் அதிக மன அழுத்தத்தை தருகிறது. இதன் விளைவு  உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் முறைகேடுகள், இதய பிரச்சனைகள், மனநல பிரச்சனைகள் போன்ற துயரங்களே !

இந்த இருண்ட நேரத்தில் யோகாசனம் என்பது  நம்பிக்கை அளிக்க கூடிய வெளிச்சம் போன்றது. இது பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை தடுத்து உடலை சீர் செய்வதன்  மூலம் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையில் வெளிச்சத்தை தருகிறது என்றே சொல்லலாம்.

நாம் நம் மனதை இளைப்பாறவிடாமல், முடிவில்லாத கேள்விகளை, சிந்தனைகளை மீண்டும் மீண்டும் மனதிற்குள் கொண்டுவருகிறோம். இதனாலே பல சமயங்களில் அமைதியுடன் ஓய்வெடுக்கத் தவறிவிடுகிறோம். தியானம்,  ஒருவரை தற்போது இயற்கை நமக்கு வழங்கியுள்ள நிகழும் காலத்தை ஏற்று வாழ ஊக்குவிக்கிறது. இரைச்சலும், பரிதாபமும் கலந்த மன நிலையிலிருந்து, சமநிலை அடைய செய்து, கவனத்தை அதிகரித்து, மனதை ஒருமுகப்படுத்தி, எதிர்மறையான எண்ணங்கள், மன தடுமாற்றங்கள் ஆகியவற்றை தகர்த்தெறியவும்  மனதினை உறுதி பெற செய்து வலிமை அடைய உதவுகிறது.

பெருந்தொற்று ஏற்படுத்தும்  ஐயத்தினாலும் முன்னெச்சரிக்கைக்காகவும்  அருகிலுள்ள பிற குழந்தைகளுடன் விளையாட முடியாமல் போவது, ஆன்லைன் பள்ளிப்படிப்பு நடத்தப்பட்டாலும் பள்ளிப் பணிகளைப் பற்றி கவலைப்படுவது, குடும்பத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்வது போன்ற பிரச்சனைகளை இன்று பல குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்கள் மனம் அதிகம் சோர்வடைகிறது.

5 வயதிலிருந்து குழந்தைகள் கூட யோகா கற்க ஆரம்பிக்கலாம்.  வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்கள் யோகா மூலம் சவால்களை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளமுடியும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் யோகாவை ஒரு அங்கமாக புகுத்துவதால் குழந்தைகளிடையே வளைந்து கொடுக்கக்கூடிய திறன்,  வலிமை, சகிப்புத்தன்மை, கவனம் மற்றும் நினைவாற்றல் மேம்படுதல், தன்னம்பிக்கை, பிறருடன் நல்ல நட்புபாராட்டுதல், நம்பிக்கையான பார்வையை ஊக்குவித்தல் போன்ற பல நன்மைகளை அறுவடை செய்திட முடியும். எனவே யோகாவை  குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து தினசரி வாழ்க்கை முறையில் சேர்ப்பது பெற்றோரின் கடமையாகும்.

பி.எஸ்.ஜி மருத்துவமனைகளில், இருதய பிரச்சனைகளைத் தடுப்பதற்கான யோகா, கர்ப்பிணிப் பெண்களுக்கு ‘ஆன்டினேட்டல்  யோகா’, குழந்தைகளுக்கான  யோகா, புற்றுநோயாளிகளுக்கும் அவர்களை கவனிப்போருக்கான  ‘ ஆன்கோ யோகா’, பி.சி.ஓ.டி மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவைக்கான   யோகா ஆகியவற்றை  வழங்குகிறோம்.

சர்வதேச யோகா தினத்திலிருந்து   ஆன்லைன் மூலம் யோகா நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம். பதிவு செய்து கொள்ள விருப்பமுடையவர்கள் naturopathy@psgimsr.ac.in  அல்லது  0422-4345430/37 மூலம்  அழைக்கலாம்.

–  டாக்டர் சுபாஷினி சங்கர்கணேஷ்,

இயற்கை மற்றும் யோகா மருத்துவர்.

பி.எஸ்.ஜி மருத்துவமனை