வாழ்வை காக்கும் பி.எஸ்.ஜி – யின் ‘வஜ்ரம்’

டாக்டர். வி. ராமமூர்த்தி, தலைவர், புனர்வாழ்வு மருத்துவத்துறை,

பி.எஸ்.ஜி மருத்துவமனை

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு சோர்வு, மூட்டுகளில் வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு உடலுபாதைகள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய பிசியோதெரபி பயிற்சிகள் செய்வது, சத்தான உணவுகளை பரிந்துரைப்பது மற்றும் யோகா போன்றவற்றை வஜ்ரம் – கோவிட் புனர்வாழ்வு திட்டம் என்ற மையத்தை தொடங்கி பி.எஸ்.ஜி மருத்துவமனை ஆலோசனை வழங்கி வருகிறது. இதுகுறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் புனர்வாழ்வு மருத்துவத்துறை டாக்டர் ராமமூர்த்தி ‘கோவிட் புனர்வாழ்வு திட்டம்’ பற்றி கூறுகிறார்.

பிரச்சனை

40 வயதான பாலாஜி, கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று, தற்போதுதான் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பின்  உடல் பலகீனம், சோர்வு, அசதி, தசைகளில் வலுவின்மை, மூட்டுகளில் வலி, அன்றாட அலுவல்களை செயலாற்ற முடியாமை, இருமல், மூக்கில் வாசனை நுகரும் உணர்வு குறைவு, உணவு விழுங்குவதில் சிரமம், பதட்டம், தூக்கமின்மை போன்றவற்றை அவர் உணர்ந்தார்.

ஏன்?

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீன நாட்டிலுள்ள ஊஹான் என்ற இடத்திலிருந்து பரவிய கொரோனா கிருமித் தொற்று சில மாதங்களிலேயே சர்வதேச பரவலாகி உலகமெங்கும் சுமார் 18 கோடி மக்களைப் பாதித்துள்ளது; சுமார் 38 லட்சம் பேர் இப்பெருந்தொற்றினால் உயிர் இழந்திருக்கின்றார்கள்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றவர்களும், அறிகுறிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களும், கொரோனா வியாதியிலிருந்து மீண்ட பின்பும் பாலாஜியைப் போல் பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்படுகின்றனர்.

மேற்சொன்ன பிரச்சனைகளுக்கு காரணங்கள் என்ன?

மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகளில் பாதி கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் உண்டானவை. மீதிப் பிரச்சனைகள் கொரோனா நோய் சிகிச்சையின் போது தீவிர சிகிச்சை பிரிவில் வெகு நாட்கள் தங்கி உடல் வலுவிழந்ததால் ஏற்பட்டவை.

மேற்சொன்ன பிரச்சனைகளுக்கு கோவிட் புனர்வாழ்வு பயிற்சிதிட்டம் நிரந்தர தீர்வைத் தருகின்றது.

பெற வேண்டிய மருத்துவ ஆலோசனைகள்

கோவிட் புனர்வாழ்வு திட்டத்தில் சேர்ந்து பயிற்சிகளை செய்யத் தொடங்கும் முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பொது மருத்துவர், நுரையீரல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர், மற்றும் இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆகியோரால் பரிசோதிக்கப்பட்டு, கோவிட் புனர்வாழ்வு திட்டத்திற்கு பரிந்துரைக்கப்படுவது பாதுகாப்பானது.

கோவிட் புனர்வாழ்வு திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற தடைகள் இல்லாத பட்சத்தில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவரை புனர்வாழ்வு மருத்துவர், இயன்முறை மருத்துவர், காது மற்றும் பேச்சு சிகிச்சையாளர் அடங்கிய குழு அவருக்கு இருக்கக்கூடிய உடல் பிரச்சனைகள், உடல்வலி, அவருடைய தற்போதைய செயல்திறன், ஆகியவற்றை ஆராய்ந்து கோவிட் புனர்வாழ்வு திட்டத்தின் இலக்கு போன்றவற்றை தீர்மானிப்பர்.

கோவிட் புனர்வாழ்வு திட்டத்தில் ஒரே மாதிரியான பயிற்சிகள் அனைவருக்கும் கற்றுத் தருவதில்லை. நோயாளிகளின் உடல்திறன் மற்றும் அவருக்கு இருக்கும் பிரச்சனைகளை பொறுத்து ஒவ்வொருவருக்கும் கற்றுத்தரும் பயிற்சிகள் மாறுபடும்.

கோவிட் புனர்வாழ்வு திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களை குறிப்பிட்ட காலத்தில் மறு பரிசோதனை செய்து பயிற்சிகளின் தீவிரம் அதிகரிக்கப்படும்.

பிசியோதெரபி பயிற்சிகளை எப்போது தொடங்குவது?

கோவிட் புனர்வாழ்வு பயிற்சித் திட்டத்தில் இரண்டு நிலைகளில் பயிற்சிகள்  வழங்கப்படுகின்றன.

கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின், முதல் ஆறு வாரங்களுக்கான பயிற்சிகள் மற்றும் முதல் ஆறுவார பயிற்சிகள் முடிந்துபின், அடுத்த 6 வாரங்களுக்கான பயிற்சிகள்  என இரண்டு நிலைகள் உள்ளன.

இந்த இரண்டு நிலைகளிலும் செய்யப்படும் பயிற்சிகள் ஒரே மாதிரியானவை தான். ஆனால் இரண்டாம் நிலையில் பயிற்சிகளின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

யார் யார் பயிற்சிகள் செய்யக்கூடாது?

இருதயத் துடிப்பு 40க்கு கீழ் அல்லது 130க்கு மேல் உள்ளவர்கள், சுவாசம் நிமிடத்திற்கு 40 முறைக்கு மேல் உள்ளவர்கள், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 90%க்கு கீழ் உள்ளவர்கள்,சீரில்லாத இருதய துடிப்பு உடையவர்கள், சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள், கால்களில் இரத்தம் உறைந்து இருப்பவர்கள், காய்ச்சல் (உடல் வெப்பநிலை 38’c க்கு மேல்) உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் 180/100 mm/Hg க்கு மேல் உள்ளவர்கள் பயிற்சிகள் செய்யக்கூடாது.

செய்யவேண்டிய உடல் பரிசோதனைகள்

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, இருதய துடிப்பின் எண்ணிக்கை, தசைகளின் வலிமை, 6 நிமிட நேரத்தில் நடக்கும் தூரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிதல் போன்ற   உடல் பரிசோதனைகளை செய்யவேண்டும்.

 எந்த மாதிரியான பிசியோதெரபி பயிற்சிகள் தேவை?

இருமலைக் குறைக்கும், சுவாசத் திறனை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சிகள், நுரையீரலிலுள்ள சளியை வெளியே கொண்டு வர செய்யப்படும் மூச்சுப் பயிற்சிகள், தசைகளின் வலுவை அதிகரிக்கும் பயிற்சிகள் (resistance exercises), ஏரோபிக் பயிற்சிகள், சமநிலை பயிற்சிகள் (balance exercise), மூட்டுகளின் அசைவை அதிகரிக்கும் பயிற்சிகள்.

மேலே கூறப்பட்ட பயிற்சிகள் எளிமையான பயிற்சிகள் என்றாலும் குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட நாட்கள் செய்யும்போது உடல் நிலையில் அபரிதமான முன்னேற்றங்கள் ஏற்படும்.

எனவே, கொரோனா நோய் சிகிச்சை முடிந்தபின், பல வகைகளிலும் சிரமப்படுவர்கள் கோவிட் புனர்வாழ்வு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

தொடர்பு கொள்ள: 82200 13330