தன்னலமற்ற தனிப்பிறவி அப்பா…

அன்னையைப் போல் பாலூட்டி வளர்க்கத்தெரியாது ஆனால் பாசத்தை ஊட்டி வளர்க்கத்தெரியும். அவருக்கு என்று தனியாக கனவுகள் எதுவும் கிடையாது. குடும்பத்தின் எதிர்காலமே அவரது வாழ்நாள் கனவு. அதற்காக அவர் செய்யும் தவமே உழைப்பு என்னும் உயிர் மூச்சு.

அவர் குடும்பத்திற்கு என எந்நேரமும் ஓயாமல் சுழலும் அச்சாணி. தனக்கென்று ஓய்வு நேரத்தை தனியாக செலவழிக்கத் தெரியாத ஒரு தனிப்பிறவி.

தந்தையின் ஆடை கண்டு கந்தையும் கண்ணீர் விடும்; பணமில்லை என்றில்லை ஆனால் ஆடம்பரமாக இருக்க அவருக்கு மனமில்லை. தன்னிறைவு இல்லாமல், தன்னிகராக உழைக்கும் தன்னலமற்றோன் அப்பா.

“தோளில் தூக்கி சுமந்தவர்

தோழனாகவும் இருப்பவர்

சுழலும் கால சக்கரத்தின்  இறுதியில்

மீண்டும் நம் கையில் வந்து சேரும்

குழந்தைதான் அப்பா”

இப்படிப்பட்ட உள்ளம் கொண்ட அனைத்து தந்தைகளுக்கும் இந்த நாள் சமர்ப்பணம்.

இந்த தந்தையர் தினத்தை முன்னிட்டு, கோவையை சார்ந்த பிரபலங்களிடம், அவர்களின் தந்தையைப் பற்றி நாம் நிகழ்த்திய நேர்காணலின் தொகுப்பு:

 

எனக்குள் உந்துதலை ஏற்படுத்தியவர்  !

டாக்டர் ஆர்.வி. ரமணி, நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், சங்கரா கண் மருத்துவமனை

கட்டிடத்தின் அஸ்திவாரம் எப்படி வெளியே தெரியாமல் கட்டிடத்தை தாங்கிப் பிடிக்கிறதோ, அதுபோலத்தான் பல சமயங்களில், ஒரு குடும்பத்தில் தந்தையின் பங்கேற்பும் வெளியே தெரிவதில்லை. மேலே உள்ள அழகான கட்டிடங்கள் தெரியுமே தவிர அஸ்திவாரம் தெரியாது. அது போன்று தான் அவருடைய பங்கேற்பும் இருக்கும்.

ஒரு தொழிலில் உழைத்து பொருள் ஈட்டி, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து முழு குடும்பத்தையும் மேலே கொண்டு வர முடிவது அவரது தளராத உழைப்பின் காரணமாக தான்.

அப்பாவுக்கு, குழந்தைகள் மேல் அளவிடமுடியாத ஆசையும், அன்பும் இருக்கும். வெளியில் அவ்வளவாக சொல்லி காட்டவில்லை என்றாலும் அளவிட முடியாத அன்பை வைத்திருப்பார்கள்.

மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டு அதில் சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதல் என் தந்தையார் டாக்டர் எ. ராமநாதனிடம் இருந்து தான் எனக்கு வந்தது. என் அப்பாவின் கார் எங்கள் வீதியில் நுழைந்தால் திண்ணைகளில் அமர்ந்துள்ளவர்கள் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள்.

கூட்டுக்  குடும்பமாக இருந்த நம் கலாச்சாரம், மேலை நாட்டு கலாச்சாரத்தை கண்டு தனி குடும்பமாக தனித்து வாழ்கின்றனர்.  சிறுவயதில் இருந்து நம்மை ஆளாக்கியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் பிள்ளைகளுக்கு உள்ளது எனவே வயதான தாய், தந்தையரை கடைசி வரை வைத்து காப்பற்ற வேண்டும். அவர்களின்  மதிப்பு அளவிட முடியாதது.

 

வயது அவருக்கு தடையில்லை!

டாக்டர் எஸ். ராஜசேகரன், தலைவர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைத் துறை, கங்கா  மருத்துவமனை

ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்தையின் பங்களிப்பு அளவிட முடியதாக ஒன்றாக இருக்கும். தாய், தந்தை என்ற இரண்டு தூண்களில் தான் குடும்பம் செயல்படுகிறது. அதில் அப்பாவின் உடைய பங்களிப்பு  மிகப்பெரியது.

அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுள்ளேன். ஒவ்வொரு சாதனைக்கு பிறகும், அடுத்த செயலுக்கான முயற்சி என்ன என்று யோசிப்பார்.

கங்கா மருத்துவமனையை நிறுவிய என் அப்பா டாக்டர் சண்முகநாதன் இன்றளவும் மருத்துவமனைக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் அதிக ஈடுபாடு கொண்டு  அவரது  79 வயதில், பாரதியார் பல்கலையில் தமிழ் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பித்து, தினமும் இரவு தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது 82 வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றார்.

எந்த நிலையிலும் வயது அவர் செய்ய நினைக்கும் காரியத்தை தடுத்ததில்லை. வயதை ஒரு அனுபவமாக வைத்துக் கொண்டாரே தவிர, அதை ஒரு தடையாக அவர் கருதவில்லை.

இன்று வரை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார். தற்போது 85 வயதாகும் அவர், இப்போதும் படித்து கொண்டு தான் இருக்கிறார். காலையில் சீக்கிரம் எழுவது, நடைபயிற்சி மேற்கொள்வது, படிப்பது, தமிழ் பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதுவது என இன்று வரை புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்.

 

உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்

பி.மோகன் எஸ். கவுண்டர், இயக்குனர், கே.எம்.சி.ஹெச்

செய்ய முடியாத காரியம் என்று நினைக்கும் விசயங்களை கூட செய்து காட்டி, அனைவரையும் தன் ஆளுமையால் வசப்படுத்தக்கூடிய குணம் கொண்டவர் என் தந்தை டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி.

அவருடன் பல சுவாரசிய நிகழ்வுகள் இருந்தபோதிலும், நல்லாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள என்  தந்தையின் பழைய இல்லத்திற்கு சென்று மதிய உணவோ அல்லது இரவு உணவோ சாப்பிட்டபின், அவரின் குடும்பத்தினர் மற்றும்  இதர சொந்தங்களுடன்  திண்ணையில் அமர்ந்து பேசுவோம். அது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியை சேர்க்கும் தருணமாகும்.

எல்லா குழந்தைகளுக்கும் தன் பெற்றோரை மகிழ்விக்க, பெருமை படுத்தவேண்டும் என்ற  ஆசை இருக்கும்.  மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க எனக்கு நேரடி அனுமதி  கிடைத்த போது நிச்சயம்  அவர் என்னை நினைத்து பெருமை கொண்டிருப்பார்.

அத்துடன், யாவரின் உதவியும் இல்லாமல் என் குழந்தைகளை நான் வளர்ப்பதும், அவர்களுக்கு புது விசயங்களை நான் சொல்லி தரும் போதும் அவர் அதை கண்டு மகிழ்ந்திருப்பார் என நம்புகிறேன்.

அவர் தனக்கும், தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த கொள்கை உடையவர்களாக இருக்கவேண்டும் என நினைப்பார் . கொண்ட கொள்கையில் சமரசம் செய்தால் தான் சாதிக்க முடியும் என்ற கருத்தை அவர் என்றும் ஏற்றதில்லை.

 

பாரபட்சம் பார்க்காதவர்

என். குமார், துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

சிறுவயதிலே தாயை நான் இழந்து விட்டதால் என்னை அதிகமாக நேசித்து வளர்த்தது தந்தைதான்.  ஆனால் அவரும் என்னுடைய 14 வயதில் தவறிவிட்டார்.  இருந்தபோதிலும் இளம் பருவத்தில் அவர் அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

என் தந்தை நீலகண்டபிள்ளை ஒரு விவசாயி. எங்கள் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், கடுக்கரை கிராமத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்தது.

அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார். அவருக்கு குறைவான வருமானம் இருந்தாலும் கூட மாதம் ஒருமுறை எனக்கு ஏதாவது புது பொருட்கள்  வாங்கி கொடுப்பார். அந்த நாளுக்காக நானும் காத்திருப்பேன்.

தூங்குவதற்கு முன் அவர் எனக்கு கூறிய இயற்கை சார்ந்த கதைகளே இயற்கையின் மீது எனக்கு அதிக ஈடுபாடு வர காரணமாக இருந்தது.

விவசாயி மகனான நான் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக உள்ளது மிகவும் பெருமையாக உள்ளது.  இந்த பதவியில்  நான் இருக்கும் போது அவர் உயிருடன் இல்லை என்பது வருத்தமாக இருப்பதோடு அவர் இருந்திருந்தால் இப்போது நான் வகிக்கும் பதவியை கண்டு மகிழ்ந்திருப்பார்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார். நானும் இதை கடைபிடித்து வருகிறேன்.

 

என் அப்பா என்றால் ‘நாணயம்’

பி. ராஜசேகர், தலைவர், டெக்ஸ்வெலி

என்னுடைய அப்பா பெரியசாமி ஈரோடு டெக்ஸ்வெலியின் சேர்மன் மற்றும் லோட்டஸ் டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர். என் அப்பா என்றால் எனக்கு நாணயம் என்ற சொல் தான் நினைவுக்கு வரும். அதனால் தான் அவர் இந்தளவு தொழிலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அவர் மிகப்பெரிய செல்வந்தர் என்று இல்லாவிட்டாலும் கூட குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்து செய்வார்.

நான் கல்லூரி முடித்த சமயத்தில் அப்பாவுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற போது, அனைத்தையும் பொறுப்பாக நான் பார்த்துக்கொள்வேன் என்ற நம்பிக்கையில், அந்த சிகிச்சைக்கே சம்மதித்தார். அவர் என்மீது வைத்த நம்பிக்கை எனக்கு பெருமையான தருணமாக இருந்தது. நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருப்பவர் என்றே அவரை கூறலாம். டிவிஎஸ் குழுமத்துடன் சேர்ந்து கிட்டத்தட்ட 42 வருடமாக தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக என் அப்பா கௌரவிக்கப்பட்டுள்ளார். இன்றும் ஏதாவது புதுமையான செயல் செய்ய வேண்டுமெனில் அப்பாவின் அபிப்ராயம் கேட்டுத்தான் செய்வார்கள்.

 

என் வளர்ச்சிக்கு அவர் உறுதியான  தூண் !

டாக்டர் தாமோதர் ராவ், இணை இயக்குனர், ராவ் ஹாஸ்பிட்டல்

ஒரு நல்ல தந்தையை  இந்த சமுதாயம்  கவனித்ததோ, பாராட்டியதோ, வாழ்த்தியதோ கிடையாது, அப்படி இருந்தும் இந்த சமுதாயத்தில் அதிக மதிப்பை கூட்டக்கூடிய நபராக அவர் திகழ்கிறார்.

பிறரிடம்  என் தந்தை  டாக்டர் எஸ்.ஆர்.ராவ் மிகவும் மகிழ்ச்சியாக இனிமையாக பழகக்கூடியவர், ஆனால் என்னை அவர் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார். எனக்கு விவரம் தெரிந்த பிறகுதான் நான் சிறந்த நிலையை அடையவே அவர் என்னை அப்படி கண்டித்து வளர்த்தார் என்பது புரிந்தது.

ஒரு லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணராக துவங்குபவர்கள் தனக்கான சிறந்த  வழிகாட்டியை, ஆசானை தேடி பல மையில்கள் கடந்து செல்வர், ஆனால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ஏனென்றால் இந்த கோவை நகரில் அவர்தான் முதல் லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர். எனக்கு அவர் நல்ல வழிகாட்டியாக இருந்தார்.

நான் என் பணியை துவங்கிய முதல் ஏழு எட்டு ஆண்டுகளில், நான் அறுவை சிகிச்சை செய்யும் போது, எந்த குறுக்கீடும் செய்திடாமல் அவர் ஆபரேஷன் தியேட்டர் வெளியே அமர்ந்திருப்பார். வெகு சில தருணங்களில் எனக்கு ஏதாவது வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அதை நான் கேட்டால் மட்டும் வழங்குவார்.

அவரின் இந்த அணுகுமுறை என்னுடைய சொந்த  அறுவை சிகிச்சை முறையை உருவாக்கிட வழிவகுத்தது. என் வளர்ச்சிக்கு வலுமையான தூணாக அவர் விளங்கியுள்ளார். இதை இந்த கடைசி 10 ஆண்டுகளில் நான் அதிகம் உணர்ந்துள்ளேன்.

என் வாழ்க்கையிலும் எனக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் தான் அறிவுரை வழங்குவார். நான் இவை அனைத்திற்கும் அவருக்கு நன்றி சொல்லிட கடமைப் பட்டுள்ளேன்.

சில மாதங்களுக்கு முன் எனக்கும் என் மனைவி தீபிகாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு தந்தையாக இப்போது மிகுந்த மகிழ்ச்சி, அத்துடன் அதிக பொறுப்பு உள்ளதை உணர்கிறேன். ஒரு குழந்தை வாழ்க்கையில் வந்த பின் வாழ்க்கையை நான் பார்க்கும் விதம் மாறியுள்ளது.

ஆண்களால் தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்து விடமுடியும் ஆனால் நல்ல தகப்பன் என்ற நிலையை அடைய அதிக தியாகம், பொறுப்பு, உழைப்பு வேண்டும்.

 

நெருக்கம் இல்லாவிடினும் அளவு கடந்த பாசம்!

ஆர். பாலசந்தர், நிர்வாக இயக்குனர், ஹோட்டல் ஹரிபவனம்

கடந்த 50 வருடமாக ஹரிபவனத்தை நடத்தி வந்த என் தந்தை எஸ்.ராஜு மிகவும் பணிவான, கண்ணியமான, நேர்மை குணம் கொண்டு தர்மத்தை காக்க கூடியவர்.

நான் என் தாயாரை சிறுவயதிலே இழந்ததால், அன்றிலிருந்து அவர் தான்  எனக்கு தாயாகவும், தந்தையாகவும்,  காவலாளியாகவும், எல்லா உறவுமாகவும் இருந்து, குலதெய்வமாக குடும்பத்தை காப்பாற்றியதோடு,  தனிமனிதராக போராடி அவருடைய கடமைகளை சரிவர செய்தார்.

நான் உணவு தொழிலுக்கு வந்தபோது எனக்கு போதுமான ஆதரவை வழங்கினார்.  தொழிலை கற்றுக் கொடுத்ததோடு, அதற்கு உறுதுணையாக இருந்து, இன்றளவும் தொழிலை சரியாக செய்வதற்கு காரணமாக இருப்பது அவர் போதித்த தார்மீக மந்திரங்களே. எதை செய்தாலும் அதில் கடுகளவாவது தர்மம் இருக்க வேண்டும் என்று கூறி, அது மட்டும்தான் உன் தொழிலையும், உன் பிள்ளைகளையும் காப்பாற்றும் என கூறுவார்.  இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு முழு காரணம் என் தந்தை மட்டுமே.

தந்தையின் குணம் எப்பொழுதும் நம்மை கண்டிப்பது மாறியாகத்தான் இருக்கும். செய்த தவறுக்கு பின்னால்  என்ன காரணம் உள்ளது, அந்த தவறை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்,  தவறை அவனுக்கு உணர்த்த வேண்டும் என சில நேரங்களில் நம்மை கண்டிப்பார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது போல வெற்றிக்கு உறுதுணையாக தந்தையின் சொல்லே  இருக்கும்.

தான்பட்ட சிரமங்களை எல்லாம் தன் மகன் படக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார். எல்லா அப்பாக்களும் மகன்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை என்றாலும் அளவு கடந்த பாசத்தை கொண்டிருப்பார்கள்.

என் அப்பாவுடன் நான் மிகவும் மகிழ்வாக உணர்ந்த தருணம், “நான் புதிதாக ஒரு வீடு கட்டி, அதில் குடியேறிய போது அன்று என்னுடன்  அமர்ந்து சாப்பிட்டு, நீ சாதித்து விட்டாய் என்று சொல்லாமல் சொல்லி அவரது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது”.

கடந்த 50 வருடமாக ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுத்தது கிடையாது. உணவை வீணடிக்க கூடாது என்பதில் மிக கண்டிப்பாக இருப்பதோடு, அன்னத்தை அவரைப் போல பரிமாறி இதுவரை நான் கண்டதில்லை. பல பேரின் உள்ளங்களில் இடம்பிடித்துள்ள அவரைப் போல இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. வரக்கூடிய காலங்களில் அதை பின்பற்ற வேண்டும் என எண்ணுகிறேன்.

 

அனைவரிடமும் ஒரே மாதிரி பழக கூடியவர்

நந்தகுமார், உரிமையாளர், செல்வம் ஏஜென்சிஸ்

எனது தந்தை  துரைசாமி ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரியான அவர் தனது படிப்பை முடித்தவுடன் தொழில், விவசாயம், கூட்டுறவாளர், ஆன்மீகவாதி, கல்வியாளர் என பல பொறுப்புகளை வகித்து உழைப்பை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டிருந்தார். அவர் விட்டுச்சென்ற ஆன்மீகம் மற்றும் கல்வி பணிகளை நானும் தொடர்ந்து அவர் வழியில் செய்து வருகிறேன்.

அனைத்து மனிதர்களிடமும் ஒரே மாதிரியாக பழககூடிய அவர் அந்த பண்பை எனக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். நான் வெற்றி பெரும் சமயங்களில் அவர் என்னிடம் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் தன் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி சந்தோஷப்படுவார்.

தந்தையுடன் ஏற்படும் மன நெருடல்களை  இளைஞர்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்கள் தரும் அறிவுரைகளை ஏற்று, பின்னாளிலே அவர்களை பின்பற்றி வாழ வேண்டும்.

 

என் முதல் ஹீரோ, நல்ல வழிகாட்டி

வைஷ்ணவி கிருஷ்ணன், இயக்குனர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

எனக்கு என் அப்பாதான் முதல் ஹீரோ. மிகவும் அமைதியானவர்,  நல்லவற்றை எந்நாளும்  சொல்லித்தந்தவர், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர், இறைவன் நமக்கு கொடுத்ததை வைத்து நன்றியுடன் மகிழ்ந்திட வேண்டும் என சிறுவயதிலிருந்து கற்றுத்தந்தார்.

ஒரு சில வார்த்தைகள்  மட்டுமே பேசுவார், ஆனால் அவரின் வார்த்தைகளை விட அவரின் செயல் மிக சத்தமாக பேசும்.  அவரை பார்த்து நான் பலவற்றை வாழ்க்கையில் கற்றுள்ளேன்.

வாழ்க்கையில் நான் அடுத்தடுத்த  நிலைகளுக்கு  செல்லும் போது, எனக்கு பலம் தந்தவராக மட்டுமில்லாமல், எதை செய்தாலும் அதை சரியான வழியில் செய்யவேண்டும் என எனக்கு சொல்லி தந்து எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்துவருகிறார்.

இந்த சிறப்பான நாளில் என் இனிய அப்பாவிற்கும், அனைத்து தந்தைகளுக்கும் இறைவன்  வளமும், நலமும் தர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

 

வெற்றிக்கு காரணமானவர் 

 கே.பி. திருமலை ராஜா, நிர்வாக இயக்குனர், கிஸ்கால் குரூப்  

என் அப்பா என்றால் எனக்கு நினைவுக்கு வருவது உழைப்பு.  அவருடைய வழிகாட்டுதலில் தான் இன்று வரை அனைத்தையும் செய்து வருகிறேன். இந்த வயதிலும் உழைத்து கொண்டே இருக்கும் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால், என்னை ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்வதோடு அவரே அனைத்தையும் பார்த்து கொள்வதாக கூறுவார்.

அவர் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு எப்படியும் செய்து விடுவார். என் வாழ்விலும் இதை கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன்.

தாத்தா ஆரம்பித்த தொழிலாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே அப்பா, அவரே கஷ்டப்பட்டு உருவாக்கியது தான் இந்த கிஸ்கால் நிறுவனம். தனது  விடாமுயற்சியால் இதை இந்தளவு வளர்த்து, வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றுள்ளார்.  இந்த வெற்றிக்கு ஒரே  காரணமாக இருந்தவர்  என் அப்பா டி.எஸ்.பி. கண்ணப்பன் தான்.