பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழ்நாடு என்று சொல்லும் பொழுதே அழகு தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித்தியாசமான இரசனை மிகு அழகை நம்மால் உணர முடியும். கோயம்புத்தூர் அழகான இடம் என்று இங்கு வந்து செல்லும் அத்தனை பேரும் சொல்லக்கூடிய ஒரு உண்மையான விஷயம். இங்கு எல்லாதரப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, என்று பல மொழிகளை பேசக் கூடியவர்கள் இருக்கின்றனர்.

பெண்களிடமும் ஓர் இரசனைமிகு அழகு எப்போதும்  குடி கொண்டிருக்கும். சினிமா மற்றும் மாடலிங் துறையில் வெற்றி பெற்றுக் கொண்டு ஒரு தமிழ் அழகுப் பெண்ணைப் பற்றிக் காண்போம்.

வாழ்க்கையில் எப்பொழுதும் சோகங்கள் இருக்கக் கூடாது என்று வெற்றி பெற்றவர்கள் சொல்வார்கள். நம் எதிர்காலத்தை எப்படி நாம் தேர்ந்து எடுக்கலாம் என்று முடிவு செய்யக் கூடிய இடம் கல்லூரி காலங்கள்தான். அப்பொழுது நமக்கு பிடித்த விஷயத்தை தைரியமாக செய்ய வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள். அப்படியொரு தருணம் ‘குயின் ஆஃப் சென்னை’ பட்டம் பெற்ற பவித்ராவுக்கும் வந்தது. திரைத்துறைக்குச் செல்வதற்கு மாடலிங் பின்புலம் வேண்டும் என்பதால் அவர் அதுகுறித்து யோசிக்கத் தொடங்கினார்.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு அடிப்படையாக, சிறு வயதில் இருந்தே பரதநாட்டிய கலைஞராக இருந்து வந்தவர் பவித்ரா. பரதத்தில் கற்றுக்கொண்ட பாவனைகளை கண்ணாடி முன்நின்று செய்து பார்க்கத் தொடங்கினார். பிறகு, நம்மால் நிச்சயமாக திரைத்துறையில் சாதிக்க முடியும் என்ற ஒரு முடிவுக்கு வருகிறார்.

உடல் அழகையும், அறிவு ஆற்றலையும் பெருக்கிக் கொண்டு, சினிமா துறைகள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கேட்க ஆரம்பிக்கிறார். எந்த ஒரு விஷயமும் கேட்ட உடனே கிடைத்து விடாது. நம் லட்சியத்தை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டு மேலும் மேலும் முயற்சிக்க தொடங்கினார் பவித்ரா.

ஆனால் அவற்றில் தோல்விகளைக் கண்ட அவர், மாடலிங்க்கு தேவையான விஷயம் ஆடைகள். அதனால் ஆடை வடிவமைப்பாளராக நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க ஆரம்பித்தார். அதன் பின் இவருடைய ஆடைகளை இவரே வடிவமைத்துக் கொண்டார்.

மீண்டும் மீண்டும் முயற்சித்து பல தோல்விகளைக் கண்ட இவருக்கு பலரது கேலிப் பேச்சால் மனக்காயங்களும் ஏற்பட்டன. ஆனால் அவற்றை வெற்றிக்கு முதல் படியாக்கி அமைதியாக இலட்சியப் பயணத்தை நோக்கி சென்றார். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியைப் போல இவரது முயற்சிக்கு வெற்றித் தேடி வந்தது ‘குயின் ஆஃப் சென்னை 2016’ என்ற பட்டம் மூலமாக!

பின்னர் இவர் நினைத்ததைப் போல் இப்பொழுது மூன்று தமிழ் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இது இவருக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட அழகான தமிழ் பெண்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். சினிமா மற்றும்  மாடலிங் துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வார்கள், ஆனால் அதையும் கடந்து, அந்த பிரச்னையில் சிக்காமல் தன்னோட இலட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் பவித்ராவைப்போல் அழகான பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒரு தமிழ் பெண் வெற்றி அடையும் பொழுது, நம் மண்ணுக்கும், நம் தமிழ் உணர்வுக்கும் பெருமை என்று பவித்ராவை பார்க்கும் பொழுது உணர முடிகிறது.

ஒரு ஆணின் மிகப்பெரிய கடமை ஒரு பெண்ணின் அறிவாற்றலையும், திறமையையும் உலகிற்கு தெரியப்படுத்துவது தான்.

இவரைப்போல் திறமையும், ஊக்கமும், சாதிக்க வேண்டும் என்று எண்ணும் பெண்களுக்கு நாம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையே இவரது வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

– பாண்டியராஜ்