நஞ்சுண்டாபுரம் குறித்து வதந்தி : காவல் துறையிடம் சுகாதாரத் துறை புகார்

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தற்போது குறைந்து வருக்கிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் மாநகராட்சியில் 70 சதவீதம் இருந்த நோய்த் தொற்று பாதிப்பு 60 சதவீதத்திற்கு கீழ் தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி, நஞ்சுண்டாபுரம் பகுதியில் 650க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், புதிய வகை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை மாநகராட்சி சுகாதாரத் துறை மறுத்துள்ளது. தவிர இதுபோன்ற வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நஞ்சுண்டாபுரம் பகுதியில் பெருமாள்கோயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதி, மேற்கு புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாள்களில் 51 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பெருமாள் கோயில் வீதி, மேற்கு புதூர் ஆகிய பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் தவறான புள்ளி விவரங்களுடன் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான வதந்தி பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வாய்புள்ளது.

இதுபோன்ற கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்றனர்.