திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்துக்குள் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் என்று பாஜக – வின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை பொண்ணையராஜபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய “மோடி கிட்டை” பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை இன்று வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் முழு மூச்சாக தடுப்பூசி போடப்பட்டது. ஏழு நாட்களில் ஒரு மாநிலம் எவ்வளவு தடுப்பூசி போட்டுள்ளது, எவ்வளவு வீணாகியுள்ளது, எவ்வளவு கொரோனோ தொற்று என்பதை பொறுத்து மத்திய அரசு தடுப்பூசிகளை ஒதுக்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதிலிருந்து தற்போது தடுப்பூசிகள் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த மாதம் 43 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தொழில்துறை அதிகம் நிறைந்த கோவையில் நோய் பரவும் தன்மை அதிகம் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கோவையில் அதிகபடியான இறப்பு பதிவாகி வருகிறது.

2006-2010 வரை முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிதாக ஒன்றிய அரசு என்ற புது வார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். தமிழ்நாடு தமிழகமாக, ஒன்றிய அரசா மத்திய அரசா என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு எனக் கூறியதோடு திமுகவின் ஆரம்பகாலமான கடந்த ஒரு மாதகாலமாக கோவை புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் என கூறினார்.