தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு வருவேன்

– தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

கொரோனா நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, உங்களை சந்திக்க வருவேன் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், நானும், அமைச்சர்களும் 24 மணி நேரமும், பணியாற்றியதால், நோய்தொற்று சங்கிலி உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்து உள்ளது. நாளை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி பாசன பகுதிகளில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், ஜூன் 12ல் சேலம் மாவட்டத்தில் நடக்கும் ஆய்வு பணிகள், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அதன் பின்னர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ள இருப்பவை அரசு பணிகள் சார்ந்தவை என்பதால், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் என்னை சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

சேலமும், தஞ்சாவூரும், நோய் தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள். எனவே, அங்கு ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்என தெரிவித்து உள்ளார்.