சீதாயாக நடிக்க ரூ. 12 கோடி சம்பளம் கேட்ட கரீனா கபூர்

ராமாயண கதையில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூர் ரூ. 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு சரித்திர புராண படங்கள் மீது இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் சரித்திர திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற தலைப்பில் படமாகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் ராமாயண கதை ‘சீதா’ என்ற தலைப்பில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் இயக்குனர் தேசாய் இயக்கும் இந்த படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கதையை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்த கரீனா கபூர் இந்த படத்தில் நடிக்க ரூ. 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தில் வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? அல்லது கரீனா கபூர் கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? என்பது விரைவில் தெரியவரும்.