நடைபயிற்சியினால்  எலும்புகள் பலப்படுமா?

நடப்பது என்பது நம் வாழ்வில்  அனைவரும் இயல்பாக  செய்யக்கூடிய ஒன்று தான்.  ஆனால் மாறி வரும் நம் வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக நடையை ஒரு பயிற்சியாக  மேற்கொள்வதற்கு  தள்ளப்படுகிறோம்.   இதற்கு முக்கிய காரணம் இன்று பெரும்பாலும் மக்கள் உடல் உழைப்பு இல்லாமல் இருக்கையில் அமர்ந்தவாறு தொடர்ந்து வேலை செய்கின்றனர். இதனால்  உடற்பருமன்,  இரத்த அழுத்தம், சோர்வு போன்றவை எளிதில் தொற்றிக் கொள்கின்றன.

நடைப்பயிற்சியை குறிப்பிட்ட வயதினவர்கள்  மட்டுமே   செய்ய வேண்டும் என்றில்லாமல் எல்லா வயதினரும் மேற்கொள்ளலாம்.  நம்  வசதிக்கேற்றவாறு  தினமும் 30 நிமிடமோ அல்லது 1 மணி நேரமோ  நடைப்பயிற்சி  செய்வதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும்.

என்ன நன்மைகள் :

  • நல்லக் காற்றோட்டாமான இடத்தில் நடைப்பயிற்சி  செய்வதினால்   நுரையீரலின்  இயக்கம் வலுப்பெற்று, சுவாசம் சம்பந்தமான கோளாறுகள் கட்டுக்குள் வருகின்றன.
  • வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில்  உள்ள அதிகப்படியான  சதைகளை குறைக்க உதவுகிறது.
  • நேராக நிமிர்ந்து நடப்பதால்  முதுகெலும்பின்  அமைப்பு வலுவடைந்து  முதுகு வலி போன்ற பிரச்சனைகள்  ஏற்படுவதில்லை.
  • இரத்தம் உடலின் அனைத்துப்  பகுதிகளுக்கும்  முறையாக சென்று, சீரான  இதயத்  துடிப்பிற்கு  உதவுகிறது.  இதயத்தை வலுவாக்குவதோடு, நுரையீரல், சுவாசக்  குழாய்கள், சுவாசப் பைகளையும் வலுவாக்குகிறது.
  • உடலில் உள்ள தசைகள் நன்றாக சுருங்கி விரிவதனால் தசைகள் உறுதிப் பெறுகின்றன.
  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வருவதற்கான  வாய்ப்பைக் குறைக்கிறது.
  • உடற்பருமன் கொண்டவர்கள் நடைப்பயிற்சி மற்றும் முறையான உணவுப் பழக்கத்தினால் உடலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
  • எலும்புகளுக்கு அதிக வலிமையினைத்  தந்து மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம்  பிரச்சனைகளில் இருந்து காக்கிறது.
  • தூக்கமின்மை இன்று  பலருக்கும் உள்ளது. நடைப்பயிற்சி மேற்கொள்வதின்  மூலம் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
  • உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரித்து கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

நவீன  காலத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள்  நம்மை சௌகரியமாக  வைத்து, நமது உடல் உழைப்பை   செய்யவிடாமல்  தடுக்கிறது. இதனால் உடல் உறுப்புகளின் இயக்கங்கள் பாதிக்கப்படுகிறது.   நடைப்பயிற்சி என்பது எளிதான ஒன்றே,  இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் நடைப் பயிற்சி  மேற்கொள்வதின்  மூலம்  ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெறலாம்.