நாட்டுப் புறப்பாடல்களின் வகைப்பாடுகள் – இணையவழிக் கருத்தரங்கம்

கே.பிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி தமிழ்த் துறை பைந்தமிழ் மன்றம் சார்பில் “நாட்டுப்புறப் பாடல்களின் வகைப்பாடுகள்” எனும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் (07.06.2021) நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முதுகலைத் தமிழ் இலக்கியம், நிறுவனர், தமிழ்நாடு நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்றம், தஞ்சாவூர், வளப்பக்குடி வீரசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

இசை வடிவில் மனிதப்பிறப்பில் மழலைப்பருவம் முதல் முதுமைப் பருவம் வரையிலான மனவளர்ச்சி காலச் சூழல்களை மரபு வழிச்சிந்தனைகள் நினைவூட்டும் விதமாய் கிராமிய வழிபாட்டுப் பாடல்கள், குழந்தைத் தலாட்டுப் பாடல்கள், சலிப்புத் தெரியாது வேலைசெய்ய தொழிற்பாடல்கள் எனவட்டார வழக்கு மொழியோடு அழகாக எடுத்துக் கூறினார்.

மேலும், விளையாட்டுப் பாடல்கள், வீரயுகப் பாடல்கள், எண்ணிக்கை கூறும் பாடல்கள், காதல் பாடல்கள், நிராசைப் பாடல்கள், திருவிழாக்கால சாமி வரவழைத்தல் மற்றும் கரகப்பாடல்கள், தத்துவப்பாடல்கள், கைம்பெண்நிலை, தாய்மாமன்முறைப்பாடல், ஒப்பாரிப் பாடல்கள் என மனித உறவுகளின் சிறப்புகளை சந்த நயத்தோடும் நாட்டுப்புற இசையோடும் ஆழமான கருத்தினை கூறினார்.

இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 130 க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர்.