காரில் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்திய பிக்கி புளோ அமைப்பு

கோவையில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேசனுடன் இணைந்து, காரிலேயே அமர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக செயல்படுத்தியது பிக்கி புளோ. இதன் கோவை கிளையின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ரிடிஷா நிவேதா இந்த பணியை ஒருங்கிணைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்: ஏற்கனவே இணைய தள படிவத்தில் முன்பதிவு செய்துள்ளோருக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கார்களில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டு, தடுப்பூசி சமூக இடைவெளி விதியை பின்பற்றி செலுத்தப்பட்டது. கார்களில் இதற்கென தனி அடையாளமிடப்பட்டு இ. பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு உதவ உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர் என்றார்.

இது குறித்து முதியவர் ஒருவர் கூறுகையில், “இது மிகவும் பயனுள்ள முயற்சி. பிரச்சனைகளில் உள்ளோருக்கு இது பற்றி கூறுவோம், இந்த முயற்சிக்கு உதவியவர்களுக்கு மிகவும் நன்றி” என்றார்.

மேலும் கோவை பிக்கி புளோ உறுப்பினர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 25 லட்சம் மதிப்பிலான நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் ஜெனரேட்டரை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இந்த டிரைவ் இன் தடுப்பூசியானது, புளோ மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர், குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு வருவோர், கையில்லா சட்டை, முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதில் 350 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.