“மனதை தைரியப்படுத்தினாலே அனைத்தும் சீராகும்”

கொடிசியாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அச்சத்தை நீக்கி, நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தி நோயிலிருந்து குணமடைய இலவசமாக,  மனநல பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள், ஆதரவு சிகிச்சையாகவே பார்க்கப்படுகிறது.  பாதிக்கபட்டவர் தனது கவலை, பயம் குறித்து தேர்ந்த ஆலோசகரின் உதவியை நாடி மீண்டு வர முடியும். இன்றைய சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

கொடிசியா வளாகத்தில், தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை உளவியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியர்  விஜயலட்சுமி இருவரும், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவசமாக,  மனநல பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து உளவியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்: கொடிசியா வளாகத்தில் ஒரு அறையில் இருந்த 200 பேருக்கு உடற்பயிற்சியோடு, மன நல ஆலோசனைகளை வழங்கியதாகவும், அவர்களிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். இது தங்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

செவிலியர் விஜயலட்சுமி கூறுகையில்: 15 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியராக பணியாற்றி விட்டு  தற்போது முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் மனதை ஒருமுகப்படுத்தி புத்துணர்வாக இருப்பது குறித்த பயிற்சிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இந்த பயிற்சியின் மூலம் ஆக்சிஜன் லெவல் அதிகரித்திருப்பதாகவும், இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு சீராக இருப்பதாக கொரொனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் செவிலியர்கள் சொன்னதாக தெரிவித்தார். மனதை தைரியப்படுத்தினாலே அனைத்தும் சீராகும் என்பதை உணர்ந்து வருவதாக தெரிவித்தார்.