ஒரு நூர்ஜகான் மாம்பழத்தின் விலை ரூ. 1000

மத்திய பிரதேசத்தில் விளையும் நூர்ஜகான் எனப்படும் அரிய வகை மாம்பழம் ஒன்றின் விலை ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ் மாவட்டம் கத்திவாடா பகுதியில் மட்டுமே பிரத்தியேகமாக விளைவிக்கப்படும் அரியவகை மாம்பழம். இது ஆப்கானிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக ஜூன் மாதத்தில் விளையும் நூர்ஜகான் மாம்பழம் இந்த ஆண்டு அதிகளவில் விளைந்திருப்பதாக அதனைப் பயிர்செய்யும் நிபுணர் இஷிக் மன்சூரி தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக விற்பனை மந்தமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அலிராஜ் மாவட்டத்தில் கத்திவாடா பகுதியில் மொத்தம் 3 நூர்ஜகான் வகை மா மரங்கள் மட்டுமே உள்ளன. இந்த மரங்களில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 250 பழங்கள் விளைந்துள்ளதாக விவசாயி சிவராஜ்சிங் ஜாதவ் தெரிவித்துள்ளார். ஒரு மாம்பழமானது 2 முதல் 3.5 கிலோ வரை எடை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாம்பழங்கள் அதிக அளவில் விளைந்துள்ளதாகத் தெரிவித்த சிவராஜ் சிங், மாம்பழங்களை வாங்க வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மற்றும் தொலைப்பேசி மூலம் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டு ஒரு பழத்தின் விலை ரூ. 500 முதல் ரூ. 1000 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு பருவ நிலை சிறப்பாக இருந்ததால் விளைச்சல் அதிமாகயிருப்பதாக தெரிவித்த சிவராஜ்சிங், கொரோனா ஊரடங்கால் விற்பனை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.