தடுப்பூசியை தவிர நிரந்தர தீர்வு இல்லை

டாக்டர் ஆர். கார்த்திகேயன், தலைவர், ரெஸ்பிரெடரி மெடிசன், பி.எஸ்.ஜி மருத்துவமனை

ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதா?

ஊரடங்கின் காரணமாக, கோவையில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  நாலாயிரத்துக்கும் மேல் உச்சம் அடைந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கோவையில் பாதிப்படைந்தோர் எண்னிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், அதிக படியான எண்ணிக்கையை தொட்ட பின் பாதிப்பின் தன்மை குறைய துவங்கும்.

மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை பொறுத்து தான் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது. இரண்டாம் அலையை குறைப்பதற்கான நடவடிக்கையில் இந்த ஊரடங்கு நல்ல பலனை கொடுத்திருக்கிறது. இயற்கையான முறையிலே இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இக்கால கட்டத்தில் முழுமையாக ஊரடங்கை தளர்த்தாமல் படிப்படியாக தளர்த்துவது நல்லது. இப்பொழுது குறைந்து வரும் கொரோனா தொற்றை மேலும், அதிகரிக்காமல்  பார்த்துக் கொள்வது அவசியம்.

தடுப்பூசிகளில் மக்கள் சிறந்ததை தேடுகிறார்களே?

எந்த தடுப்பூசி சிறந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு பல வருடங்கள் ஆகும். அடிப்படை விஞ்ஞான தகவல்களை வைத்துக் கொண்டு எது சிறந்ததாக இருக்கலாம் என்பதை பற்றிய யூகங்களை தான் கொடுக்க முடியும். உண்மையில் எந்த தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஒரு வருடம் கழிந்த பின் தான்  கூற முடியும்.

தடுப்பூசி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இந்த சமயத்தில், சிறந்த தடுப்பூசி எப்போது கிடைக்கிறதோ அப்போது மட்டுமே செலுத்திக் கொள்வேன் என்றில்லாமல், கிடைக்கும் தடுப்பூசியை சீக்கிரம் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியினால் நம்மை மட்டுமல்லாது, சமுதாயத்தையும் பாதுகாக்க முடியும். கொரோனாவை எதிர்க்க தடுப்பூசியை தவிர வேறு எந்த நிரந்தர தீர்வும் கிடையாது என்பது மருத்துவத் துறையின் ஒரு அசைக்க முடியாத  நம்பிக்கையாக உள்ளது.

தடுப்பூசியை கண்டு சிலர் பயப்படுகின்றனரே?

தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்பது வேறு, அதன் வினை என்பது வேறு. தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் வருவதை பக்க விளைவு என்று கூற முடியாது. கொரோனாவுக்கு போடக்கூடிய தடுப்பூசிகளில் கணிசமான நபர்களுக்கு ஒரு நாள் காய்ச்சல் அல்லது உடம்பு வலி இருக்கும். ஆனால் இதுபோன்ற காரணத்திற்காக மக்கள் பயப்படுவது  இல்லை.

மரணங்கள் அல்லது வேறு அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற பயம் தான் மக்களிடம் உள்ளது. குறிப்பாக, ரத்த கட்டு ஏற்பட்டு விடுமோ என மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் ஏதேனும் நிரந்தர விளைவுகள்  நேர்ந்து விடும்  என பயம் கொள்கிறார்கள். இந்த பயம் தேவையில்லாதது. தடுப்பூசி போடும்போது மிக அபூர்வமாக தான் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். 20 கோடி மக்கள் இந்தியாவில் மட்டும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட  பாதிப்புகள் என்பது மிக குறைவு. தடுப்பூசியினால் விளைவுகள் ஏற்படுமோ என்று  அஞ்சினால், கொரோனாவினால்  ஏற்பட கூடிய பாதிப்புகள்  அதிகரிக்கும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை குறைந்து விட்டதா?

கடந்த வாரங்களில் இருந்த ஆக்சிஜன் பற்றாக்குறை  சூழலை ஒப்பிடும் போது  தற்போது  கிட்டத்தட்ட  பற்றாக்குறை இல்லை என்றே கூறலாம். இதற்கான ஒரு முக்கிய காரணம் அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கை தான். அதோடு, அண்டை மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறையும் நிலையில் அங்கிருந்தும் உதவுகிறார்கள்.

நடுத்தர வயதினருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதா?

இரண்டாம் அலையில் குறைந்த வயதுடையவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் அலையில் அதிகம் பாதிப்படைத்தனர். ஆனால் இந்த அலையில் 40 வயதுடையவர்களுக்கு  அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டு நிறைய மரணங்கள் நிகழ்ந்தது.  முதல் மற்றும் இரண்டாம் அலையை ஒப்பிடுகையில்  இரண்டாவது அலையில் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகம்.

முதல் அலையில் வயதானவர்கள், இரண்டாவது அலையில் நடுத்தர வயதுடையவர்கள்   என்கின்ற அடிப்படையில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருந்தால், அது குழந்தைகளை அதிகம் பாதித்துவிடுமோ என்ற பயம் உள்ளது.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளதா?  மூன்றாவது அலைக்கு வாய்ப்பிருந்தால் அதை சமாளிக்க கூடிய நடவடிக்கைகள்?

அடுத்து வரக்கூடிய மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு, இந்த இரண்டு அலையிலும் நாங்கள் கண்ட அனுபவமே  எங்களுக்கு  பலமாக இருக்கும்.  கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுக்கு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளோம்.

இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால், மூன்றாம் அலையிலும்   தட்டுப்பாடு  ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், ஆக்சிஜன் சம்மந்தப்பட்ட அனைத்து கட்டமைப்புகளையும் விரிவுபடுத்திக் கொண்டிருப்பதோடு, அதை சேமித்து வைக்க கூடிய வசதியையும் ஏற்படுத்தி வருகிறோம். அதை மேற்கொண்டு பலப்படுத்துவதற்கு   முயற்சிக்கிறோம். போதுமான மருந்துகளை  சேமித்து வைப்பதற்கான எல்லா விதமான  நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

குழந்தைகளை மூன்றாம் அலை தாக்கும் என்ற அச்சம் உள்ளதால், அவர்களுக்கான பிரத்யேகமான கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் எடுக்க ஆரம்பித்து விட்டோம்.