கொரோனாவிற்கு குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றுதான் !

டாக்டர். எ.ஜெயவர்தனா, தலைவர், குழந்தைகள் நல மருத்துவத்துறை, பி.எஸ்.ஜி மருத்துவமனை 

உலகம் முழுவதும் கொரோனா தன் உக்கிர ஆட்டத்தை காட்டி உயிர்களை காவு வாங்கி வருகிறது. முதல் அலையிலிருந்து மீண்ட பின், வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எண்ணுவதற்குள் இரண்டாம் அலையின் கோர தாண்டவம் ஆரம்பித்து, ஒரு சங்கிலியை போல நீண்டு கொண்டே செல்கிறது.

முதியோர்கள், நடுத்தர வயதுடையவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்தால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்குமா என்ற அச்சம் உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றின் வீரியத்தை குறித்தும், ஊரடங்கினால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதா என்பது பற்றியும், தடுப்பூசியின் அவசியம் மற்றும் இரண்டாம் அலை குறித்தான சில தகவல்களையும் பி.எஸ்.ஜி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடம்,

“தி கோவை மெயில்” நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பு:

குழந்தைகளுக்கு எம்மாதிரியான பாதிப்புகள்?

வீட்டிலேயே உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதற்கான காரணம்?

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வெளியில் சென்று வருவதால், அவர்களின் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா  தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஊரடங்கு என்பதால் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?

திறந்த வெளியில் தனியாக விளையாடும் போது கொரோனா வருவதற்கான வாய்ப்பு குறைவாக தான் உள்ளது. குழந்தைகள் குழுவாக அல்லது அருகில் அமர்ந்து விளையாடும் போது, யாராவது ஒருவருக்கு தொற்று இருந்தாலும் மற்றவருக்கும் அது பரவும் வாய்ப்பு உள்ளது.

விலங்குகளிடமிருந்து குழந்தைகளுக்கு பரவுமா?

விலங்குகளிடம் இருந்துதான் கொரோனா முதலில் மனிதர்களுக்கு வந்தது. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் பரவலாம். இது எல்லா உயிரினங்களுக்கும் பரவி  சுழற்சியாகி கொண்டே தான் இருக்கும். வீட்டு பிராணிகளுக்கு இருந்தால் கூட குழந்தைகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளுக்கு வரும் கொரோனா பாதிப்பு  தீவிரமாக இருக்குமா அல்லது மிதமாக இருக்குமா?

குழந்தைகளைப் பொறுத்த அளவில் இதுவரை தீவிர பாதிப்பு என்றில்லாமல் மிக குறைந்த பாதிப்பே வந்துள்ளது. எனவே பயப்பட வேண்டியதில்லை. 95 % அல்லது 99 % குழந்தைகளுக்கு இது ஒரு லேசான நோய் தான். மழைக்காலத்தின் போது அவர்களுக்கு சளி, காய்ச்சல்  ஏற்பட்டால் எப்படி இரண்டு அல்லது மூன்று நாளில் சரியாகிவிடுமோ, அதேபோல தான், இப்பொழுது வந்துள்ள கொரோனாவும். குழந்தைகளை பொறுத்த அளவில் இதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

குழந்தைகளுக்கு  பிற  உடல் பாதிப்புகளான  இதய பாதிப்பு, கிட்னி மற்றும் கல்லீரல் போன்ற பாதிப்புகள்  இருந்து, அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் போது  அது தீவிரத் தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால்  நல்ல ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

தாய்ப்பால் கொடுக்க கூடிய தாய்மார்களுக்கு கொரோனா இருந்தால் பாலின் வழியாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?

இது குறித்த தெளிவான ஒரு மருத்துவ ஆய்வு வெளிவரவில்லை. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் மூச்சு காற்று மூலமாக குழந்தைக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற  சமயத்தில், தாய்ப்பாலை தனியாக எடுத்து கொடுக்கலாம். தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் இருப்பதால் அதன் வழியாக எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, குழந்தைகளுக்கு உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் செயல்படுகிறது.

குழந்தைகளுக்கு நம் நாட்டில் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டா?

தற்போது உபயோகத்தில் உள்ள தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வு மேற்கொண்ட பின்தான் குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமா  என்பதை பற்றி உறுதியாக கூற முடியும். பக்க விளைவுகள் போன்றவை ஏற்படுமா என்பதை பற்றி ஆராய்ந்த பின்னரே கொடுக்க முடியும். பெரியவர்களை ஓப்பிடும் போது குழந்தைகளுக்கு குறைவான பாதிப்பே ஏற்படுகிறது.

பெரியவர்களுக்கு  அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுவதால் அவர்களுக்கு  தடுப்பூசி செலுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாசு அதிகமுள்ள பகுதிகளில் வளரும் அல்லது கூட்டம் நிறைந்த இடத்தில்  உள்ள  குழந்தைகளுக்கு  தொற்று காலத்தில் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறதா?

அதிகமான கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்கும் குழந்தைகள், விடுதிகளில் இருக்கும் குழந்தைகளை  நாம் மிக அதிக கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழலில் உள்ள குழந்தைகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலே, அது அனைவருக்கும் பரவி விடும்.

குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க?

சரிவிகித உணவு கொடுப்பதின் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதன் மூலம் எல்லா சத்துக்களும் ஒரே மாதிரியான அளவில் கிடைக்கும்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதா?

2020 இல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தான் தற்போது இந்த  ஆண்டிலும் உள்ளது. பெற்றோர்கள் பயப்பட கூடிய அளவிற்கு குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இல்லை.

அதே சமயம் குழந்தைகளுக்கு வராமல் தடுப்பது மிக முக்கியம்.

குழந்தைகளிடம் இருந்து பெரியவர்களுக்கு பரவுகிறதா?

குழந்தைகளிடம்  இருந்து பெரியவர்களுக்கும் கொரோனா பரவலாம். குழந்தைகளுக்கு  சில சமயங்களில், ஒரு நாளைக்கு மேல் அறிகுறிகள் இருக்காது,  இதன் மூலம் அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும்  பரவ கூடிய வாய்ப்பு உள்ளதோடு பெரியவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவதற்கான  சாத்திய கூறுகளும் உண்டு. இந்த தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கு குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

குழந்தை  நன்றாக  இருக்கிறது என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால், அவர்களின் உடலில் வைரஸ் இருக்கும். குழந்தைகளுக்கு பொதுவாக அறிகுறிகளற்ற அறிகுறிகள் தான்   காணப்படும்.  அறிகுறிகள் தென்பட்டால் நம்மால் உடனே நடவடிக்கை  எடுத்து அவர்களை தனிமைப்படுத்த முடியும்.

பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு  சிகிச்சையளிக்க  பி.எஸ்.ஜி  மருத்துவமனையில் உள்ள மருத்துவ கட்டமைப்பு  பற்றி?

பி.எஸ்.ஜி யில் குழந்தைகளுக்கான 25 தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் அவர்களுக்கு குறைபிரசவம்  ஏற்பட்டு விடுகிறது.

இம்மாதிரியான குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் கவனித்து கொள்வதற்கான வசதியும்,  சமாளிக்க கூடிய கட்டமைப்பும்  இங்கு உள்ளது.