தாமிர பாத்திரத்தில் தண்ணீரை வைப்பதன் நன்மைகள்

தாமிரத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைப் பற்றி ஆராய்வதில் இன்றைய மருத்துவ சமூகம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இன்றைய கட்டுரையில், சத்குரு, நம் தண்ணீரை குறிப்பிட்ட முறையில் சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய யோகக் கண்ணோட்டத்தை நமக்கு அளிக்கிறார். மேலும் பல்வேறு நச்சுக்களின் அமைப்பையே சுத்தப்படுத்துவதில் தாமிரப் பாத்திரங்களில் சேமிக்கப்படும் நீர் எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்கை வகுக்கிறது என்பதை விளக்குகிறார்.

சத்குரு: நீங்கள் “நான்” என்றும் “மனித அமைப்பு” என்றும் அழைப்பது, அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட “மென்பொருளின்” வேலை. இன்று மென்பொருள் என்பது நினைவாற்றல் என்று நமக்குத் தெரியும். அது தனிப்பட்ட மனித உடலாக இருந்தாலும் அல்லது பெரிய அண்ட உடலாக இருந்தாலும், அவை பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்களால் ஆனவை. ஐந்து கூறுகளும் அவற்றின் சொந்த நினைவாற்றலைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக அவை ஒரு குறிப்பிட்ட பாணியில் நடந்து கொள்கின்றன.

தண்ணீருக்கும் நினைவாற்றல் இருப்பதால், அதை எவ்வாறு சேமித்து வைப்பது என்பதில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். இன்று, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், இதைப்பற்றி அதிக பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன, மேலும் தண்ணீருக்கு நினைவாற்றல் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர் – அது தொடும் அனைத்தையும் நினைவில் கொள்கிறது.

நம் கலாச்சாரத்தில் இதை நாம் எப்போதும் அறிந்திருக்கிறோம், இதை நாம் பல வழிகளில் பயன்படுத்தியும் வருகிறோம். நாம் யாருடைய கைகளிலிருந்தும் தண்ணீர் குடிக்கவோ அல்லது உணவை வாங்கி உண்ணவோக் கூடாது; நம்மை நேசிக்கும் அக்கறையுள்ளவர்களிடம் இருந்து தான் வாங்கி உண்ண வேண்டும் என்று நம் பாட்டி நமக்கு அன்றே சொல்லியிருக்கிறார்.

கோயில்களில், நமக்கு ஒரு துளி தண்ணீர் தருவார்கள், அதை பெற செல்வந்தர்கள் கூட வரிசையில் நிற்பார்கள், ஏனென்றால் அந்த தண்ணீரை நீங்கள் வேறு எங்கும் வாங்க முடியாது. அது தெய்வீகத்தின் நினைவைக் கொண்டுள்ள நீர். அதை நாம் தீர்த்தம் என்று அழைப்போம். மக்கள் அதைப் பருகும்போது, அது அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை நினைவூட்டுகிறது. தண்ணீர் ஒரு விஷமாகவோ அல்லது ஒரு சாகா வரம் அளிக்கும் ஒரு மருந்தாகவோ அமைய அது எந்த வகையான ஞாபகத்தை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்தே அமைகிறது.

நீங்கள் ஒரு செப்புப் பாத்திரத்தில் முந்தைய இரவோ அல்லது குறைந்தது நான்கு மணிநேரம் முன்பாக தண்ணீரை நிரப்பிவைத்தால், செம்பு பாத்திரத்தில் இருக்கும் அந்த தண்ணீர் ஒரு குறிப்பிட்ட தரத்தைப் பெறுகிறது, அது உங்கள் கல்லீரலுக்கு மிகவும் நல்லது மற்றும் உங்கள் ஆரோக்கியத் திற்கும், ஆற்றலுக்கும் உகந்தது.

தண்ணீர் வலுக்கட்டாயமாக, ஈயம் அல்லது பிளாஸ்டிக் குழாய்களில் பல திருப்பங்கள் மற்றும் வளைவுகள் வழியாக உங்கள் வீட்டிற்கு பயணிக்கிறது என்றால், அந்தத் தண்ணீரில் அதிக எதிர்மறை விஷயங்கள் பதிந்திருக்கும். ஆனால் தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கும் தன்மையால், அது தன்னை பழைய நிலைக்குத் திரும்பச் செய்வதற்கான ஒரு வழியையும் கொண்டுள்ளது.

நாம் பிடித்து வைத்திருக்கும் குழாய் நீரை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தாமல் விட்டால், அதில் ஏற்பட்டிருந்த எதிர்மறை தன்மை தானாகவே மறைந்துவிடும். நீங்கள் என்னைப் போலவே தொடர்ந்து பயணிக்கிறீர்கள் என்றால், குறிப்பாக உணவு விஷயத்தில் சிறிய விஷங்கள் எப்போதும் பல்வேறு வடிவங்களில் உங்களிடம் வந்து கொண்டிருக்கின்றன. செம்பு மற்றும் தாமிரம் அது மாதிரியான விஷங்களை உங்களுக்காக கையாளுகிறது.