கோவையில் தலைமை செயலாளர் ஆலோசனை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு கோவையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா முதல் அலையின் போது கொரோனா பரவல் சென்னையில் அதிகம் காணப்பட்ட நிலையில், இந்த இரண்டாம் அலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் மாவட்டமாக கோவை மாறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் 4000 க்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. கடந்த இரு தினங்களாக இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் கோவையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அதிகாரி ஜெகநாதன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். .