திரைப்படங்களை அரசியலாக்காதீர்!

வாழ்க்கையில் நாம் பலவிஷயங்களையும் நபர்களையும் நாம் கடந்து போவோம். ஆனால் அதில் சிலர் நம் மனதில் நீங்காமல் இருப்பார்கள்,  நம் சந்தோஷத்திலும் சரி துக்கங்களிலும் சரி. எப்பொழுதும் நம்முடன் இருக்கக்கூடிய விஷயம் நட்பு மட்டும் தான். ஒரு நல்ல நண்பன் அமைந்தால் வாழ்க்கையே நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதிலும், நமக்குப்பிடித்து செய்யும் தொழிலில் நண்பன் இருந்தால் அது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அவ்வாறான அரியநட்பை கல்லூரிக் காலங்களில் பெற்று, அந்த நட்பின் துணையுடன் எழுத்துலகில்  பேரும் புகழும் பெற்ற இருவர், ஆனால் ஒருபெயர் கொண்டவர்கள் சுபா.இவர்கள் இதுவரை பல சிறுகதைகள் மற்றும் ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘அநேகன்’, ‘ஆரம்பம்’, ‘ஐ’, ‘தனி ஒருவன்’, ‘கவண்’ போன்ற படங்களில் எழுத்தாளர்களாக, வசனகர்த்தவாக பணியாற்றியுள்ளனர்.  டி.சுரேஷ் மற்றும் ஏ.டி.பாலகிருஷ்ணன் (சுபா) ஆகியோர் ஓர் அழகான காலைப் பொழுதில் நமது ‘தி கோவை மெயில்’ வார பத்திரிகைக்கு அளித்த சிறப்பு பேட்டி.

எழுத்தாளர்களாக ஆக வேண்டும் என்று நீங்க இரண்டு பெரும் எப்பொழுது முடிவு  செய்தீர்கள்?

சிறு வயதில் இருந்து எங்களுக்கு கதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. ஆனால் எங்களுடைய பள்ளிகக் காலங்களில் தான் கதைகள் எழுத ஆரம்பித்தோம்.

 உங்களுடைய நட்பு எங்கே தொடங்கியது?

1975ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இரண்டு பெரும் நண்பர்கள் ஆனோம். அப்பொழுது இருந்து இதுவரைக்கும் எங்கள் நட்பு நன்றாக இருகின்றது.

எழுத்தாளர்களுக்கு எந்த மாதிரியான அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டும் அல்ல, எந்த மொழி எழுத்தாளர்களாக இருந்தாலும் வாசகர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், நல்ல வாசகர்கள் அமைந்தாலே போதும். எழுத்தாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் தானாகக் கிடைக்கும்.

இந்திய சினிமா?

இந்திய சினிமாவைத் தீர்மானிக்கும் அளவிற்கு நாங்கள் கிடையாது. ஒரு நல்ல சினிமா இரசிகர்களாக இப்போது நாங்கள் இருக்கின்றோம். நம் நாட்டில் நிறைய வித்தியாசமான கதைக்களங்கள் இருக்கின்றன. இதற்கு கொஞ்சம் தொழில்நுட்பம் ஆதரவும் வியாபார ரீதியான பலமும் கிடைத்தால் நாம் எந்த நாட்டுத் திரைப்படத்திற்கும் சவால் விடக்கூடிய அளவிற்கு நம் தமிழ் சினிமா இருக்கும்.

ஒளிபதிவாளர் மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் நட்பைப்பற்றி சொல்லுங்கள்?

நாங்கள் பத்திரிக்கைத் துறையில் இருக்கும் பொழுது சிலமாவட்டத்தில் மக்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்னைகளை குறித்து ஒரு கட்டுரை வடிவில் எழுதுவோம். அப்பொழுது அந்த கட்டுரைகளுக்கு, புகைப்படம் எடுக்க எங்களுடன் சேர்ந்தவர் தான் கே.வி. ஆனந்த். அப்பொழுது இருந்து எங்களுடன் பயணிக்க ஆரம்பித்தவர் அவர்.

சோசியல் மீடியாக்கள் பற்றி?

இதில் நல்ல விஷயமும் இருக்கு, கெட்ட விஷயமும் இருக்கு. தற்போது இளைஞர்களுக்கு இதில் இருக்கிற ஈடுபாடு புத்தகத்தில் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லலாம். நாம் இளைஞர்கள் ஒவ்வொருத்தரும் எழுத வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் சோசியல் மீடியாக்களில் கவனம் செலுத்தி, நம் இலக்கியத்தைவிட்டு விலகிச் சென்று கொண்டிருகிறார்கள். வரும் காலங்களில் பெற்றோர் அவர்கள் பிள்ளைகளை புத்தகங்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் நாங்கள் கூறிக் கொள்கிறோம்.

உங்கள் பார்வையில் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும்?

திரைக்கதை எழுதும்போது சந்தோச மான நிகழ்வுகளையும், சோகமான தருணங்களையும் அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்கும் அளவிற்கு எழுத வேண்டும்.

ஒரு இயக்குநருக்கும், ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் நட்பு எப்படி இருக்க வேண்டும்?

ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு கர்வம் இல்லாமல் இருக்க வேண்டும்.

உங்களைக் கவர்ந்த தமிழ் இயக்குநர்கள்?

சுவாரசியமான திரைப் படங்களை எடுக்கக்கூடிய அத்தனை இயக்குநர்களையும் எங்களுக்குப் பிடிக்கும், குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.

சமூகவலைத்தளங்களில் ஒரு திரைப்படம் வந்தஉடன் அதை வெளிநாட்டு மொழிபடங்களை பார்த்து எடுத்தபடம் என்று கூறுகிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

வெளிநாட்டு படங்களைப் பார்த்து எடுக்கிறோம் என்று நாம் குறை கூறி கொண்டு இருக்கிறோம். ஆனால் அங்கு வரும் படங்களில் நமது புராணக்கதைகளில் ஒன்றான மகாபாரதம் இருக்கின்றது என்பதை நாம் யாரும் உணர்வது இல்லை. அவர்கள் முதலில் எடுத்திருக்கலாம். ஆனால் கதையம்சம் இங்கு இருந்து சென்றது தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சிலதிரைப்படங்கள் வெளிவரும்போது, சமூகத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று பிரச்னைகள் வருகிறது. இதை எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கட்டபொம்மன் வெள்ளைக்காரனிடம் பேசுவதை நாம் படமாக பார்க்கும் பொழுது அங்கு நடந்த சம்பவங்களை மட்டும் தான் பார்க்க வேண்டும், வெள்ளைக்காரனை ஒரு தமிழன் இழிவுபடுத்திவிட்டான் என்று பார்க்கக் கூடாது. அந்த மாதிரி திரைப்படங்களை அரசியலாக்கக் கூடாது.

உங்கள் படங்களில் காதல் சார்ந்த விஷயம் ரொம்ப அழகா இருக்குனு சொல்லுறாங்க, அதற்கு காரணம்?

காதல் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் சுவாரசியத்தை நாங்கள் காதலில் பார்க்கின்றோம்.

சினிமாவில் உள்ள அடிப்படை பிரச்னைகள் பற்றி?

முதலில் திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும். சினிமாவை நம்பி வாழும் குடும்பங்களின் உழைப்பை மற்றவர் திருடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது.

தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்புவது?

நிறைய எழுத்தாளர்களோட கதைகளைப் படியுங்கள். நம் இலக்கியத்தையும், சமூக பண்பாட்டையும் கற்றுக்கொண்டு நேரத்தை வீணாக்காமல், உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் எழுத்தாளர்கள்தான். உங்கள் வாழ்க்கை பயணங்களைப் பற்றியும் எழுத ஆரம்பியுங்கள். இந்த சித்திரை தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புது வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறோம். நன்றி வணக்கம்.

– பாண்டியராஜ்