கொங்கு மண்டலத்தில் திமுக ஏன் கால் பதிக்க முடியவில்லை?

எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் போலவே, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலம், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதும் அதிமுகவுக்கு மீண்டும் கைகொடுத்துள்ளது. கருணாநிதி காலத்தை போலவே, ஸ்டாலின் காலத்திலும் கொங்கு மண்டலம் திமுகவுக்கு இரும்புத் திரையாகவே இந்த முறையும் தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பகுதி அதாவது வேடச்சந்தூர் வரையிலான பகுதிகள் கொங்கு மண்டலம் என அழைக்கப்படுகிறது. தொழில், வேளாண் வளம் மிக்க இந்த மண்டலம் தொடக்கக் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு தொடர்ந்து சாதகமாகவே இருந்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமைக்கு முழு ஆதரவு வழங்கிய கொங்கு மண்டல மக்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தொடர்ந்து முழு ஆதரவு வழங்கியிருப்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவு தெளிவாக காட்டுறது.

கொங்கு மண்டலம் தமிழகத்தின் பிற மண்டலங்களைவிட சற்று வித்தியாசமான பகுதியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு, இயல்பாகவே தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்காளர்கள் அதிகம். சிறுபான்மை வாக்குகள் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி கொங்கு மண்டலம் தான்.

கொங்கு மண்டலத்தை பொருத்தவரை 30 சதவீதம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தினர், 30 சதவீதம் மொழிவழி சிறுபான்மையினர், செங்குந்த முதலியார், செட்டியார், கொங்கு சாணார், வேட்டுவக் கவுண்டர் உள்ளிட்ட சமூகத்தினர் 35 சதவீதமும், 5 சதவீத சிறுபான்மையினரும் உள்ளனர். மொழிவழி சிறுபான்மையினர் வாக்குகளில் சரிபாதி அதாவது 15 சதவீதம் அருந்ததியர்கள்.

இதில் எப்போதும் அதிமுகவுக்கு கொங்கு வேளாளர் சமூகத்தில் இருந்து 20 சதவீத வாக்குகள், அருந்ததியர் சமூகத்தில் இருந்து 10 சதவீத வாக்குகள், பிற மொழிவழி சமூகத்தினரில் 10 சதவீத வாக்குகள், பிற சமூக வாக்குகளில் 5 சதவீதம் என பெரும்பாலான தொகுதிகளில் குறைந்தபட்சம் 45 சதவீத வாக்குகளை பெற்று இதுவரை நடந்த பேரவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றிப்பெற்றுள்ளது.

ஆனால், இந்த முறை, அருந்ததியர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு விழாத நிலையிலும், கொங்கு வேளாளர்களின் 30 சதவீத வாக்குகளில் 90 சதவீதம், கிட்டதட்ட 28 சதவீதம், அருந்ததியர் அல்லாத மொழிவழி சிறுபான்மையினரில் 10 சதவீதம், கூடுதலாக பிற தமிழ் சமூக வாக்குகள் என 40 சதவீத வாக்குகளை தாண்டியதாலும், நாம் தமிழர் கட்சி, பிற தமிழ் சமூக வாக்குகளை பிரித்ததாலும் அதிமுக எளிதாக பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுவிட்டது.

இம்மண்டலத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 3, கோவையில் 10, திருப்பூர், ஈரோட்டில் தலா 8, நாமக்கல்லில் 6, சேலத்தில் 11, தருமபுரியில் 5, கிருஷ்ணகிரியில் 6, கரூரில் 3 (குளித்தலையை தவிர்த்து), திண்டுக்கல்லில் 4 (பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் தொகுதிகள் மட்டும்) என 64 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் இந்த முறை அதிமுக 42 தொகுதிகளையும், திமுக 22 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

சேலம், தருமபுரியில் கைகொடுத்த பாமக:

அதாவது கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், நீலகிரியில் 1, திருப்பூரில், ஈரோட்டில் தலா 5, நாமக்கல்லில் 2, சேலத்தில் 10, திண்டுக்கல் 1 தருமபுரியில் 5, கிருஷ்ணகிரியில் 3 தொகுதிகளை அதிமுக வென்றுள்ளது அதிமுக தொண்டர்களையும், உள்ளூர் கட்சி நிர்வாகிகளையும் ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளது.

திமுகவை பொருத்தவரை கோவை, தருமபுரி மாவட்டங்களில் எந்த தொகுதிகளையும் கைப்பற்ற முடியாதது திமுக தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும், நீலகிரியில் 2, ஈரோடு, திருப்பூரில் தலா 3, நாமக்கல்லில் 4, சேலத்தில் 1, கிருஷ்ணகிரியில் 3, கரூரில் 3, திண்டுக்கல்லில் 3 என 22 தொகுதிகளை வென்றுள்ளது.

கொங்கு மண்டலத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு அதிமுகவின் அடிப்படை செல்வாக்கு, எடப்பாடி பழனிசாமியின் தலைமை, மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் இருந்து ராகுல் காந்தி தலைமை, கமல் தலைமைக்கு இழுத்துச்செல்லப்பட்ட மொழிவழி சிறுபான்மையினர் வாக்குகள் மீண்டும் திரும்பியது, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் வன்னியர்கள், கொங்கு வேளாளர்கள் அடர்த்தியாக வாழும் தொகுதிகள் அதிமுகவுக்கு கைகொடுத்தது, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை நாம் தமிழர் கட்சி பிரித்தது ஆகியவை தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் இயல்பாகவே கொங்குவேளாளர் சமூகத்தின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அச்சமூகத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் இந்த முறை வாக்களித்துள்ளது வாக்குச்சாவடிகள் வாரியாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கொங்கு வேளாளர்கள் அடர்த்தியாக இல்லாத தொகுதிகளில் மட்டும் தான் திமுகவால் இந்த முறை (காங்கயம் தவிர்த்து) வெற்றிப்பெற முடிந்துள்ளது தான் இதற்குச் சான்று.

அதேபோல மொழிவழி சிறுபான்மையினரான மலையாளிகள், குரும்ப கவுண்டர்கள், ஒக்கலிகா சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் கோவை மாவட்டத்தில் திமுகவால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. கொங்குவேளாளர்கள், மொழிவழி சிறுபான்மையினர் அடர்த்தியாக வாழும் இப்பகுதியில் அதிமுக பெரும்பான்மை வாக்குகளை அள்ளிச்சென்றதால் திமுகவால் தேர்தல் களத்தில் தாக்க முடியவில்லை. கடந்த முறை கடும் போட்டிக்கு இடையே கோவை மாவட்டத்தில் வெற்றிப்பெற ஒரே தொகுதியான சிங்காநல்லூர் தொகுதியை கூட திமுகவால் இந்த முறை தக்கவைக்க முடியவில்லை என்பதை பார்க்கும்போது இது தெளிவாகிறது.

மேலும், பாஜக-அதிமுக கூட்டணி காரணமாக மொழிவழி சிறுபான்மையினர் வாக்குகளும், அருந்ததியர் வாக்கில் ஒரு குறிப்பிட்ட பங்கும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியதும் கொங்கு மண்டலத்தில் அதிமுக எழுச்சிக்கு உதவியது.

கொங்கு வேளாளர்கள்-வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது 10.5 சதவீத இடஒதுக்கீடு என்ற அஸ்திரம் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றிக்கான பங்களிப்பை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

இழப்பை ஏற்படுத்திய நாம் தமிழர்:

மேலும், வெற்றி வித்தியாசம் குறைந்த தொகுதிகளான கூடலூர் (நீலகிரி மாவட்டம்), மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (கோவை மாவட்டம்), பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம்), ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர் (சேலம் மாவட்டம்), கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகியவற்றில் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை நாம் தமிழர் கட்சி பிரித்ததால் திமுகவின் வெற்றி 13 தொகுதிகளில் பறிபோனது.

இவை தவிர கொங்கு மண்டலத்தின் நீண்ட கால பிரச்னையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியது, கொங்கு மண்டலத்தில் உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்தியது, கூட்டுறவு வேளாண் சங்க கடன்களை ரத்து செய்தது உள்ளிட்டவையும் கொங்கு மண்டலம் இந்த முறையும் அதிமுகவை கைதூக்கிவிட்டுள்ளது.

கொங்கு வாக்காளர்களின் மனநிலை:

கொங்கு மண்டலம் தமிழகத்தின் பிற மண்டலங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான அரசியல் தன்மை கொண்டது. இயல்பாகவே தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை இங்கு மிகமிக அதிகம்.

மேலும், தமிழகத்தில் மென்மையான இந்துத்துவா வாக்கு வங்கி கணிசமாக குவிந்தும், சிறுபான்மை வாக்கு வங்கிகள் குறைந்தும் இருப்பதும் கொங்கு மண்டலத்தில் தான்.

வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் வேரூன்றி வளர்ந்து வாக்கு வங்கியை வளர்த்த திமுகவால் கொங்கு மண்டலத்தில் 1967 தேர்தல் வரை பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு பின்பும் காங்கிரஸ் அல்லது இடதுசாரி தேசிய கட்சிகளுடன் கூடிய கூட்டணி பலத்தால் தான் திமுக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்று வருகிறது. திமுகவின் வாக்கு வங்கி பலம் குறைவாக இருக்கும் நிலையில், மற்றொரு திராவிட கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கி அசூர பலமாக இருப்பதும் கொங்கு மண்டலத்தில் தான்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அருந்ததியர் வாக்கு வங்கி, அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கியாக இருந்தது. அதிமுக இரண்டாக பிரிந்து அதிமுக (ஜெ.) அணி களம் கண்டபோது ஜெயலலிதாவுக்கு மாநிலம் முழுவதும் 22.37 சதவீத வாக்கு வங்கியில் பெரும் பகுதி கொங்கு மண்டலத்தில் கிடைத்தது. மொத்தமாக ஜெயலலிதா பெற்ற 27 எம்.எல்.ஏ.க்களில் 17 எம்.எல்.ஏ.க்களை கொடுத்ததும் கொங்கு மண்டலம் தான்.

ஜெ.வை வாழவைத்த கொங்கு:

காங்கயம், வெள்ளக்கோயில், கோபி, பெருந்துறை, பவானிசாகர், அந்தியூர் (பழைய ஈரோடு மாவட்டம்), அவிநாசி, பொள்ளாச்சி, வால்பாறை (பழைய கோவை மாவட்டம்), தாரமங்கலம், ஓமலூர், ஏற்காடு, சேந்தமங்கலம், கபிலர்மலை, எடப்பாடி (பழைய சேலம் மாவட்டம்), பர்கூர், பாலக்கோடு (பழைய தருமபுரி மாவட்டம்) என ஆகிய தொகுதிகளை ஜெயலலிதா வென்றதுடன், கொங்கு மண்டலத்தில் 95 சதவீத தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தின்போது கைகொடுத்த கொங்கு மண்டலம், 1996 பேரவைத் தேர்தல் தவிர இறுதி காலம் வரை கைவிடவே இல்லை.

2011-இல் மொத்தமுள்ள 57 தொகுதிகளில் 45 தொகுதிகளையும், 2016-இல் 53 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை தக்கவைத்த முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதாவுக்கு பெற்றுத்தந்த பெருமை கொங்கு மண்டலத்தையே சாரும்.

2016 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி இருந்தால் ஆட்சியை தக்கவைத்திருக்கலாம். அக்கட்சியால் 13 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது.

பாஜக கூடுதல் பலம்:

2011, 2016 பேரவைத் தேர்தல்கள், 2014 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் கோட்டைவிட்ட திமுக, 2019 தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2014-ல் கோவை (18.4 சதவீதம்), பொள்ளாச்சி (24.8 சதவீதம்), திருப்பூர் (19.8 சதவீதம்), ஈரோடு (21.5 சதவீதம்), தருமபுரி (16.3 சதவீதம்) ஆகிய தொகுதிகளில் திமுக மூன்றாவது இடத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணியால் தள்ளப்பட்டது. இருப்பினும் 2019 தேர்தலில் 50 முதல் 60 சதவீத வாக்கு வங்கியை கொங்கு மண்டலத்தில் பெற்றுள்ளது.

இந்த வாக்கு வங்கியை 2021 பேரவைத் தேர்தலிலும் எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்பதற்காக நுட்பமான தேர்தல் வியூகங்களை திமுக கையாண்டது. கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட செயலர்களை நியமித்தது திமுக. கோவையில் முதல் முறையாக 5 வகையான சாதியினருக்கும், நாமக்கல்லில் நாட்டுக்கவுண்டர் ஒருவருக்கும் மாவட்டச் செயலர் பதவியை கொடுத்து வாக்குகளை கவர முயற்சி செய்தது.

இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்த கொங்கு மண்டல மக்கள், ஸ்டாலின் தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தரவில்லை.

திமுகவை கைவிட்ட மொழிவழி சிறுபான்மையினர்:

அதிமுக-பாஜக கூட்டணி. டெல்டா, வட மண்டலம், தென் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் திமுகவுக்கு 2ஆம் கட்டத் தளபதிகள் அதிகம். ஆனால், கொங்கு மண்டலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க தளபதிகள் அறவே இல்லை என்பது தான் திமுகவின் இப்போதைய நிலை.

கரூர் மாவட்டத்தில் மட்டுமே இப்போதைக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளார். இதுபோன்ற சுறுசுறுப்பான, நுட்பமான அரசியல் நகர்வுகளை தெரிந்த, மக்கள் செல்வாக்கு மிக்க தளபதிகளை சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி முதல்கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 4 மாநகராட்சிகள் மற்றும் பிற உள்ளாட்சிகளை கைப்பற்ற வேண்டும். அது நடந்தால் தான் அடுத்து 2026}இல் நடக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை ஸ்டாலினால் தகர்க்க முடியும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.