ஜெகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக சூழ்நிலைதான் காரணம்

  – தயாரிப்பாளர் சசிகாந்த்

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஜேம்ஸ் காஸ்மோ உள்பட பலர் நடித்த படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். ஒய் நாட் சசிகாந்த் தயாரித்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்தும் நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படம் தற்போது வருகிற 18ம் தேதி ஒடிடியில் வெளியாகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியதாவது: நான் தயாரித்த ஏலே, மண்டேலா படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில்தான் வெளிவந்தது. இப்போது நான் தயாரித்துள்ள ஜெகமே தந்திரம் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது நான் மனம் விரும்பி, மகிழ்ந்து செய்யும் காரியமல்லை. சூழ்நிலைதான் இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது.

ஏலே, மண்டேலா படங்கள் ஏற்கெனவே ஓடிடி தளத்திற்கென ஒப்பந்தம் போடப்பட்ட படங்கள். திடீரென தியேட்டர்காரர்கள் ஒரு மாதத்திற்கு பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கூறியதால் நான் ஓடிடி தளத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீற முடியவில்லை. அதன் காரணமாகத்தான் அந்த படங்கள் ஓடிடியில் வெளியானது. மற்றபடி தியேட்டர் உரிமையாளர்கள் மீது எனக்கு கோபமோ, வருத்தமோ, பகையோ எதுவும் இல்லை.

ஜெகமே தந்திரம் படம் எப்போதோ வெளியீட்டுக்கு தயராகி விட்டது. நானும் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்கிற திட்டத்தில் இருந்தேன். காரணம் இந்த படம் தியேட்டர் அனுபவத்தை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. இனி எப்போது சூழ்நிலை சரியாகும் என்பதும் உறுதியாக தெரியவில்லை. எனவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன். இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சகஜமானது. அது சரிசெய்யப்பட்டு விட்டது. எனது படங்களை தியேட்டரில் வெளியிடவே நான் முன்னுரிமை கொடுப்பேன். சூழ்நிலை சரியில்லாதபோது ஒரு தயாரிப்பாளராக நான் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது இருப்பதும் தவிர்க்க முடியாததாகும். என்றார்.