ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனை: மாநகராட்சி ஆணையரிடம் மனு

ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்க கோரி மாநகராட்சி ஆணையாளரிடம், கோவை மாவட்ட இறைச்சி வியாபாரிகள் இன்று (01.06.2021) மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு ஊரடங்குஅமலில் உள்ளது. இதனால் காய்கறி,மளிகை,மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது காய்கறிகளை வாகனத்தின் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிடப்பட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.

இதே போல தற்போது கொரோனா தொற்று பரவலால் புரதச்சத்து நிறைந்த ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் இறைச்சி தட்டுப்பாடு மக்களுக்கு நிகழ்ந்துள்ளது. இறைச்சி,மற்றும் முட்டை ஆகியவற்றை ஆன்லைன் மூலம் ஹோட்டல்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வித தடையும் இல்லாத அனுமதி ஏற்கனவே வழங்கபட்டுள்ளது.

அதேபோல மக்கள் பயன்பெறும் வகையில் இறைச்சிகள் தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று நேரடியாக விநியோகம் செய்ய அனுமதி வழங்குமாறு கோவை மாநகராட்சி ஆணையாளரிடம், கோவை மாவட்ட கோழி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் கொங்கு மண்டல ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் நல்வாழ்வு சங்கத்தினர் மனு அளித்தனர்.

இந்த மனுவை பெற்று கொண்ட ஆணையாளர் இறைச்சி கடைகளை திறக்காமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் முறையை பின்பற்றி மக்களுக்கு டோர் டெலிவிரி செய்து கொள்ள உத்தரவு அளித்ததாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.