பாலின் தேவை என்றும் குறையாது

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது அநேக இந்தியர்களின் பழக்கமாக உள்ளது. டீ காபி எது குடித்தாலும் அதில் பால் நிச்சயம் இருக்கும். பால் ஒரு மனிதனுக்கு தேவையான அத்தியவசிய ஊட்டச்சத்துகளை கொண்ட இயற்கை பொருள். பாலுக்கு நமக்கும் உள்ள தொடர்பு நாம் பிறந்தது  முதலே உள்ளது.

பாலின் மூலம் தயிர், வெண்ணை, நெய் மற்றும் பல பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது பால் உளளவிய அத்தியாவசிய உணவு பொருளாக கருதி பெரும் விவசாய தொழிலாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பால் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உலகளாவிய உணவாக அதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் தொடங்கியது.

பால் அனைவருக்கும் அத்தியாவசியமான பொருள் என்றபோதிலும், இதன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருமானம், அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். ஆவின் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக ஏறக்குறைய 30 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர்.

பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் நிலமற்ற ஏழைகள், சிறு மற்றும் குறு விவசாயிகள். இவர்கள் வறுமைக்கோட்டின் விளிம்பிலேயே பல காலமாக வாழ்ந்துவருகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏறக்குறைய ஏழு கோடி விவசாயக் குடும்பங்கள் பால் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றன. இவற்றில் 75% நிலமற்ற சிறு விவசாயிகள்.

கறவை மாடுகள் வளர்ப்பவர்கள் தற்போது பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். முன்பில்லாத அளவுக்கு மேய்ச்சல் தரைகள் குறைந்துவருகின்றன. குளம், ஏரிகள் பராமரிக்கப்படுவதில்லை என்பதால், கறவை மாடுகளுக்குத் தேவையான பசும்புல்லும் தண்ணீரும் எளிதில் கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களால் கறவை மாடுகளின் விலையில் கடும் ஏற்றம் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், பால் உற்பத்திக்குத் தேவைப்படும், பசும்புல், புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் மற்றும் இதர செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘விவசாயப் பொருட்களின் விலை ஆணையம்’ தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, உலர் தீவனத்தின் விலை 2012 முதல் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய 50% உயா்ந்துள்ளதாகக் கூறுகிறது.

தற்பொழுது ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 51 ல் இருந்து 3 ரூபாய் குறைக்கப்பட்டு 48 ஆக உள்ளது. இந்த விலை வரை காரணம் பால் உற்பத்திக்கு தேவைப்படும் மேய்ச்சல் நிலங்கள் இல்லாததும்,தீவன பொருட்களின் விலையும், பராமரிப்பு செலவுகளும் அதிகரித்ததால் தான் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பால் பொருட்களுக்கான தேவையும் அதனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் என்றும் குறையாது.