கோவையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் கோவையில் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு, ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தடுப்பூசியின் தட்டுப்பாடு காரணமாகவும், கையிருப்பில் போதிய தடுப்பூசி இல்லாததினாலும் தமிழகத்தில் 3ம் தேதி முதல் 5 ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கோவையை பொருத்த வரையில் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வந்தது.

இந்த சூழலில் தமிழக அரசின் புதிய அறிவிப்பை அடுத்து தற்போது, ஊசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இதில் பல மையங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்ற பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கோவை ராஜவீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை 6 மணி முதலே தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.