ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்கள் கைகளில் தான் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்

ஊரடங்கை நீட்டித்து கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்த காணொளி பதிவில் அவர் பகிர்ந்து கொண்டதாவது:

கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து தான் இன்னொருவருக்கு பரவுகிறது. அதனால் தொற்று நம் மீது பரவாமல் இருக்க நம்மை நாமே தற்காத்து கொள்ள வேண்டும். நாமும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே பரவலை தடுத்திட முடியும். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மே 24 முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஊரடங்கை நீட்டித்து கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. தமிழக மக்களை காக்கவே நான் என்னை ஒப்படைத்துள்ளேன்.

முதல் அலைக்கு முழுமையாக முற்று புள்ளி வைக்க தவறியதால் தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாவது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புக்கும், நிதி நிலைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ் கால சோகங்களில் இருந்து மீண்டு எதிர்கால புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெறவேண்டும். கொரோனா தொற்றை வென்று நமக்கான வளமிகு தமிழகத்தை அமைப்போம் என கூறியுள்ளார்.