கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும் – சுகாதாரத் துறை செயலர்

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இருப்பில் உள்ள 4.93 லட்சம் தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

இதுவரை 96.18 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. 87 லட்சம் தடுப்பூசிகள் நேற்று வரை செலுத்தப்பட்டுள்ளது. 4.93 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது இருப்பில் உள்ளன. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும். தடுப்பூசி இல்லாததால் ஜூன் 3 முதல் 5 தடுப்பூசி செலுத்த முடியாது.

1.74 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு இந்த மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டியுள்ளது. ஜூனில் 42.58 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. முதல்கட்டமாக வரும் 6ம் தேதி 3 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது. ரூ.3.5 கோடிக்கு உலகளாவிய டெண்டர் கேட்டுள்ளோம்.

தற்போது, தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கையிருப்பில் தடுப்பூசி இல்லாததால் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என கூறியுள்ளார்.