கஷ்டப்பட்டு உழைத்தாலும் எதனால் வெற்றி கிடைக்காமல் போகிறது?

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பலவற்றிற்கு ஆசை கொள்கிறான். அதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும்கூட அவர்களின் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறாமல் போவது ஏன்?

சத்குரு: கஷ்டப்பட்டு உழைப்பதால் மட்டும் உலகில் எதையும் சாதித்துவிட முடியாது. இன்றிருக்கும் ஒரு பெரிய பிரச்னை இது. சிறுவயதில் இருந்தே உங்கள் பெற்றோர், கஷ்டப்பட்டு படி, கஷ்டப்பட்டு வேலை பார் என எதைச் செய்தாலும் அதைக் கஷ்டப்பட்டு செய்ய வேண்டும் என்றே கற்றுக் கொடுத்தார்கள். எதையுமே கஷ்டப்பட்டு செய்தால், அது நடந்துவிடும் என்று அர்த்தமில்லை. அது ஒரு கழுதையின் வாழ்க்கையாக இருக்கும். யாருமே உங்களிடம், ‘சந்தோஷமாகப் படி, ஈடுபாட்டோடு வேலை செய்’ என்று சொல்லவில்லை. ‘கஷ்டப்பட்டு செய்’ என்றே சொன்னார்கள். அவர்கள் தங்கள் வாழ்வை இப்படித்தான் தாங்களே கடினமாக்கிக் கொண்டார்கள். இப்போது உங்கள் வாழ்க்கையும் அவ்வாறே ஆவதற்கு முழு உத்வேகத்துடன் பாடுபடுகிறார்கள்.

எதை அடைய வேண்டும் என்று நீங்கள் இப்படிக் கஷ்டப்பட்டு முயற்சிக்கிறீர்கள்? கஷ்டமாக இருந்தால், அதை விட்டுவிடுங்கள். எதையும் சந்தோஷமாகச் செய்ய முடிகிறது என்றால் செய்யுங்கள், இல்லையெனில் அதைச் செய்யாதீர்கள். வேலை செய்யும் நிமித்தம், உங்களை நீங்கள் கஷ்டப்படுத்திக் கொள் கிறீர்கள் என்றால், அந்த வேலையால் உங்களுக்கு என்ன பயன் அல்லது உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் என்ன பயன்?

இதற்கு,  அந்தக் கோவில் வாசலில் சும்மா அமர்ந்து, பிச்சையெடுத்து உண்ணலாம். வருபவர்கள் ஒன்றோ, இரண்டோ ரூபாய் தருவார்கள், அதை வைத்து உண்ணுங்கள். குறைந்தபட்சம் அதையேனும் சந்தோஷமாகச் செய்யுங்கள். உங்கள் வாழ்க¢கையை உங்களுக்கே இவ்வளவு கடினமாக நீங்கள் ஆக்கிக் கொண்டால், உங்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வை இதைவிடக் கடினமாக நீங்கள் ஆக்கிவிடுவீர்கள். உலகில் சந்தோஷத்தைப் பரப்பப் போகிறீர்கள் என்றால், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு செயல்களைச் செய்யுங்கள். இல்லை, துயரத்தைத்தான் பரப்பப் போகிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் ஒன்றும் செய்யாமல் சும்மாவே இருக்கலாம். நீங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பதற்காக அது நடக்கவேண்டும் என்றில்லை, அப்படி அது நடக்கவும் நடக்காது.

ஒருநாள், சங்கரன் தனது பழைய அம்பாஸடர் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் வீட்டிற்குள் சென்று, அங்கிருந்த ஒரு பூனையைத் தூக்கி வந்து, குதிரை வண்டியில் குதிரையைப் பூட்டுவதைப்போல், அதைக் காரின் முன்னே சேர்த்து கட்டி வைத்து, ‘இழு, இழு, போகலாம்’ என்றார். இதைப் பார்த்தவர்கள், ‘நீ என்ன முட்டாளா? இந்தச் சிறு பூனை எப்படி இந்தக் காரை இழுக்கும்? இதை இழுப்பதற்கு பல ஆட்களின் பலம் வேண்டும். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்றார்கள். அதற்கு சங்கரன் சொன்னார், “என்னை என்ன முட்டாள் என்று நினைத்தீர்களா? என் கையில் குதிரையை விரட்டும் சாட்டை இருக்கிறது” என்றாராம்.

எனவே கஷ்டப்பட்டு செய்தால் எல்லாம் நடந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அப்படியெல்லாம் நடக்காது. சரியான செயல்களைச் செய்தால்தான் அது வேலை செய்யும். வாழ்விலே வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வெற்றி பெற்றது, அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததால் மட்டும் கிடையாது. அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று புரிந்து, சரியான செயல்களைச் செய்ததால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

இன்னொரு நாள், அதே சங்கரன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திறந்திருந்த ஒரு சாக்கடைக் குழியில் விழுந்துவிட்டார். அதில், அவர் கழுத்து வரை கழிவுகள் இருந்தது. இதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கவேண்டும்! அதில் இருந்து வெளிவர அவர் தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார், ஆனால் அவரால் வெளிவர முடியவில்லை. அதன்பின், “தீ! தீ! தீப் பிடிச்சிருச்சு!” என்று கத்தினார். இக்கூக்குரலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவசர அவசரமாக தீயணைப்புப் படையினரை வரவழைத்தனர். தீயணைப்புப் படையினர் வந்து பார்த்தபோது, எங்குமே தீப¢பற்றியிருக்கவில்லை. ஆனால் குழியில் இருந்த சங்கரனைப் பார்த்து, அவரை வெளியேத¢ தூக்கிவிட்டு, “எங்குமே தீப்பற்றவில்லை. பின்பு ஏன் தீ! தீ! என்று கத்தினீர்கள்” என்று கேட்டனர். அதற்கு சங்கரன், “நான் மலம்! மலம்! என்று கத்தியிருந்தால், நீங்கள் வந்திருப்பீர்களா?” என்று கேட்டார். எனவே சரியான செயல் எதுவோ, அதை நீங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில், தேவையான வேலை நடக்காது.